இளையான்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அடிப்படை வசதிக்கோரி அதிகாரிகளிடம் மனு அளிக்க வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு அறிவுரை


இளையான்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அடிப்படை வசதிக்கோரி அதிகாரிகளிடம் மனு அளிக்க வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு அறிவுரை
x
தினத்தந்தி 11 Feb 2022 12:50 AM IST (Updated: 11 Feb 2022 12:50 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அடிப்படை வசதிக்கோரி அதிகாரிகளிடம் மனு அளிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தவருக்கு, மதுரை ஐகோர்ட்டு அறிவுரை கூறி உள்ளது.

இளையான்குடி, 

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 650 ஏழை மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஓவிய ஆசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர் ஆகியோர் கிடையாது. மாணவர்கள் கல்வி கற்பதற்கு போதிய வகுப்பறைகள் இல்லை. மாணவர்கள் மரத்தின் அடியில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு தேவையான ஆய்வகம், கழிவறை வசதிகளும் இல்லை. பள்ளியில் சுற்றுச்சுவர் எழுப்பப்படாததால் பணி நேரத்தில் பள்ளி வளாகத்திற்குள் பொதுமக்கள் நடமாடி வருகின்றனர். எனவே இளையான்குடி பகுதி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தேவையான ஆசிரியர்களை நியமித்து, பள்ளியின் அடிப்படை வசதிகள், ஆய்வுகூடம், கழிப்பறை, சுற்றுச்சுவர் அமைத்து தர உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் தனது கோரிக்கை குறித்து உரிய அதிகாரிகளிடம் மனு அளிக்க வேண்டும். அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். இதனையடுத்து மனுதாரர் தரப்பில் இந்த வழக்கை திரும்ப பெறுவதாக கூறியதால், வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story