கடையநல்லூர் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.6 லட்சம் பறிமுதல்


கடையநல்லூர் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.6 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Feb 2022 12:53 AM IST (Updated: 11 Feb 2022 12:53 AM IST)
t-max-icont-min-icon

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.6 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

கடையநல்லூர்:
கடையநல்லூர், எட்டயபுரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.6 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பறக்கும் படை சோதனை
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதனையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க தேர்தல் பறக்கும் படை நியமிக்கப்பட்டு, தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மாவடிக்கால் பகுதியில் செங்கோட்டை யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொண்டல்சாமி தலைமையில், போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் முகமது கனி, போலீஸ்காரர் ரமேஷ் ஆகியோர் அடங்கிய பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 
ரூ.2½ லட்சம் பறிமுதல்
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு சோழபுரத்தை சேர்ந்த முத்து என்பது தெரியவந்தது. அவரது மோட்டார் சைக்கிளை பறக்கும் படையினர் சோதனை செய்தபோது, அதில் ரூ.2½ லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பணம் குறித்து தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை மேற்கொண்டனர். தொழில் சம்பந்தமாக பணத்தை எடுத்து செல்வதாக முத்து தெரிவித்தார். ஆனால் அந்த பணத்திற்குரிய  ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து, கடையநல்லூர் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்.
எட்டயபுரம்
இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ரகுபதி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தூத்துக்குடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.3½ லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர் தூத்துக்குடியை சேர்ந்த அதிர்ஷ்டராஜ் என்பதும், கோவில்பட்டியில் நடைபெறும் குடும்ப நிகழ்ச்சிக்காக பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
ஆனால், அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், ரூ.3½ லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் கணேசன் பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தார்.

Next Story