மூலங்குடியில், விவசாயிகள் சாலை மறியல்


மூலங்குடியில், விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 Feb 2022 1:24 AM IST (Updated: 11 Feb 2022 1:24 AM IST)
t-max-icont-min-icon

ஓகைப்பேரையூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி மூலங்குடியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 45 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கூத்தாநல்லூர்:
ஓகைப்பேரையூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி மூலங்குடியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 45 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சாலை மறியல்
கூத்தாநல்லூர் அருகே ஓகைப்பேரையூரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்து நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு சரியான இடம் தேர்வு செய்த பிறகு நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 
இந்தநிலையில் கூத்தாநல்லூர் அருகே உள்ள மூலங்குடி சாலையில் அமர்ந்து விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்ததும் கூத்தாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
45 பேர் மீது வழக்கு
 அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் இன்ஸ்பெக்டர் அனந்தகிருஷ்ணன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படவே சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். 
இந்த சாலை மறியலால் திருவாரூர்-மன்னார்குடி- வடபாதிமங்கலம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 45 பேர் மீது கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story