அ.தி.மு.க.-பா.ஜ.க.வுக்கு சிம்மசொப்பனமாக தி.மு.க. திகழ்கிறது


அ.தி.மு.க.-பா.ஜ.க.வுக்கு சிம்மசொப்பனமாக தி.மு.க. திகழ்கிறது
x
தினத்தந்தி 11 Feb 2022 1:26 AM IST (Updated: 11 Feb 2022 1:26 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுக்கு சிம்ம சொப்பனமாக தி.மு.க. திகழ்கிறது என்று தஞ்சையில் தேர்தல் பிரசாரத்தின்போது உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

தஞ்சாவூர்:
அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுக்கு சிம்ம சொப்பனமாக தி.மு.க. திகழ்கிறது என்று தஞ்சையில் தேர்தல் பிரசாரத்தின்போது உதயநிதி ஸ்டாலின் கூறினார்
உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அவர் நேற்று தஞ்சை மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள கல்லுக்குளம் மற்றும் கீழவாசல் பகுதியில் தஞ்சை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.‌க. மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். 
அப்போது அவர் பேசியதாவது:-
வாக்களிக்க தயார்
நான் கரூர் மாவட்டத்தில் பிரசாரத்தை தொடங்கி திருச்சியில் முடித்துக்கொண்டு தஞ்சை வந்துள்ளேன். உங்களை எழுச்சியோடு பார்க்கும்போது நான் வாக்கு கேட்க வேண்டியது இல்லை. சட்டமன்றத் தேர்தலைப்போன்று உள்ளாட்சி தேர்தலிலும் நீங்கள் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிக்கு வாக்களிக்க தயாராகி விட்டீர்கள்.
தி.மு.க ஆட்சிக்கு வந்து 8 மாதம் தான் ஆகிறது. அதற்குள் கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தி.மு.க. செய்த சாதனைகளை ஞாபகப்படுத்த நான் வந்துள்ளேன். கொரோனா நிவாரணமாக இரண்டு தவணையாக ரூ.4 ஆயிரம் கொடுக்கப்பட்டது. அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைத்தது, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைத்தது, இல்லம் தேடி கல்வித் திட்டம், நம்மை காக்கும் 48 திட்டம், நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி என பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
10 கோடி பேருக்கு தடுப்பூசி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வதை தான் செய்வார், செய்வதை தான் சொல்வார். தி.மு.க. ஆட்சிக்கு வந்த புதிதில் கொரோனா 2-வது அலை உச்சத்தில் இருந்தது. அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததன் விளைவாக கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பின்னர் 3-வது அலை வந்த போது ஆரம்பத்திலேயே துரித நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டது. 
ஆட்சிக்கு வந்த 8 மாதத்தில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அதன் விளைவாக இதுவரை 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 1 கோடி பேருக்கு மட்டும்தான் தடுப்பூசி போடப்பட்டது.
சிம்ம சொப்பனமாக
இந்திய அளவில் நடந்த சர்வேயில் நம்பர் ஒன் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் ராகுல் காந்தி பேசும்போது, தி.மு.க இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முடியாது என்று கூறியுள்ளார். 
இப்படி அ.தி.மு.க, பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக தி.மு.க. விளங்குகிறது.
தி.மு.க. அரசின் சாதனை
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்னையே தேடிக் கொண்டிருக்கிறார். என்மேல் எவ்வளவு பாசம் வைத்துள்ளார். நான் எங்கேயும் செல்லவில்லை. தினமும் தேர்தல் பிரசாரத்தில் தான் ஈடுபட்டு வருகிறேன்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கடந்த 8 மாத ஆட்சியில் செய்த சாதனைகளை எடுத்துக்கூறி வேட்பாளர்கள் வாக்கு சேகரியுங்கள்.  தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி செய்ய வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story