தொழிலதிபரை காரில் கடத்திய 2 பேர் கைது


தொழிலதிபரை காரில் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 Feb 2022 1:40 AM IST (Updated: 11 Feb 2022 1:40 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் தொழிலதிபரை காரில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி
திருச்சி தில்லைநகர் 2-வது கிராசில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் கார்த்திக்குமார். தொழிலதிபரான இவர் ரியல் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய நண்பர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த தங்கதுரை(வயது 26).
இந்த நிலையில் கார்த்திக்குமார், தொழில் நிமித்தமாக தங்கதுரையிடம் ரூ.6 லட்சம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த கடன் தொகையை திரும்ப கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. 
நேற்று முன்தினம் காலை கார்த்திக்குமார், தனது மகளை காரில் லால்குடி அருகே உள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். லால்குடி வெங்கடேஸ்வராநகர் அருகே அவருடைய காரை வழிமறித்த தங்கதுரை மற்றும் அவருடைய நண்பர்களான தஞ்சை இ.பி.காலனியைச் சேர்ந்த ஆறுமுகம் (40), திண்டுக்கல் அண்ணாநகரை சேர்ந்த பாஸ்கர் (26), தஞ்சை கலைஞர் நகரை சேர்ந்த வினோத் (28) ஆகியோர் கார்த்திக்குமாரிடம், தங்கதுரைக்கு கொடுக்க வேண்டிய ரூ.6 லட்சத்தை கேட்டு தகராறு செய்தனர்.
தொழிலதிபர் கடத்தல்
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் திடீரென கார்த்திக்குமாரை அதே காரில் கடத்தி சென்றனர். நீண்ட நேரமாகியும் கார்த்திக்குமார் வீடு திரும்பாததால் அவருடைய மனைவி தேவிபாலா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் லால்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் லால்குடி, கல்லக்குடி, அரியலூர் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
மேலும், கார்த்திக்குமாரை கடத்திச் சென்ற கார் எந்த பகுதியில் உள்ளது என விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த கார், அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே அரண்மனைக்குறிச்சி பகுதியில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து திருமானூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்து சென்ற திருமானூர் போலீசார் காருடன் கார்த்திக்குமாரை மீட்டனர். மேலும் அவரை கடத்தி சென்ற தங்கதுரை, ஆறுமுகம் ஆகியோரை பிடித்து லால்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
2 பேர் கைது
இதுகுறித்து லால்குடி இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தார். மேலும், இதில் தொடர்புடைய பாஸ்கர், வினோத் ஆகியோரை தேடி வருகிறார். திருச்சியில் கடத்தப்பட்ட தொழிலதிபரை சினிமா பாணியில் போலீசார் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story