நெல்லை மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-வது கட்ட பயிற்சி தபால் ஓட்டு பெறவும் விண்ணப்பித்தனர்
நெல்லை மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-வது கட்ட பயிற்சி நடந்தது அவர்கள் தபால் ஓட்டு பெறவும் விண்ணப்பித்தனர்
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-வது கட்ட பயிற்சி நடந்தது. அவர்கள் தபால் ஓட்டு பெறவும் விண்ணப்பித்தனர்.
2-வது கட்ட பயிற்சி
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, நெல்லை மாநகராட்சியில் 491 வாக்குச்சாவடிகளும், 3 நகராட்சிகளில் 123 வாக்குச்சாவடிகளும், 17 பேரூராட்சிகளில் 319 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 933 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மாவட்டம் முழுவதும் ஓட்டுப்பதிவு பணியில் 4,500 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களுக்கான 2-வது கட்ட பயிற்சி நேற்று நடைபெற்றது. 14 இடங்களில் இந்த பயிற்சி நடைபெற்றது.
செயல்விளக்கம்
நெல்லை மாநகராட்சி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி, வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் அதிகாரியுமான விஷ்ணு சந்திரன் பயிற்சியை தொடங்கி வைத்தார். சுகாதார அலுவலர் சாகுல் அமீது, உதவி பொறியாளர் பிலிப் அந்தோணி ஆகியோர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் செயல்விளக்கம் அளித்து பயிற்சி அளித்தனர்.
மாதிரி வாக்குப்பதிவு நடத்துவது, வாக்குப்பதிவை தொடங்குவதற்கான நடைமுறைகள், வாக்குப்பதிவு முடிந்த பிறகு என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
தபால் ஓட்டு பெற
வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு தபால் ஓட்டு போடுவதற்கான நடவடிக்கை நேற்று எடுக்கப்பட்டது. அதாவது அலுவலர்கள் தபால் ஓட்டு பெறுவதற்காக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அதில் தங்களது ஓட்டு அமைந்திருக்கும் வார்டு, வரிசை எண் ஆகிய விவரங்களை பூர்த்தி செய்து, புகைப்படம் ஒட்டி, அதனுடன் வாக்காளர் அடையாள அட்டை நகலும் இணைத்து ஒப்படைத்தனர்.
அவர்களுக்கு தபால் மூலம் வீடுகளுக்கு ஓட்டுச்சீட்டு அனுப்பி வைக்கப்படுகிறது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story