கிராமமக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
திருக்காட்டுப்பள்ளி அருகே கிராமமக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருக்காட்டுப்பள்ளி:
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருச்சென்னம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ராட்சச ஆழ்குழாய் அமைத்து அருகே உள்ள மாவட்டங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருச்சென்னம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் புதிய குடிநீர் திட்டம் தொடங்கினால் அந்த பகுதி மக்களின் குடிநீர் தேவை, விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே புதிதாக குடிநீர் திட்டத்தை தொடங்க கூடாது என்பதை வலியுறுத்தி நேற்று திருச்சென்னம்பூண்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகில் கிராம மக்கள் கையில் கருப்புக்கொடி ஏந்தி உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு திருச்சென்னம்பூண்டி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வக்கீல் ஜீவக்குமார், காங்கிரஸ் பூதலூர் வட்டார தலைவர் அறிவழகன் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனர். தகவல் அறிந்ததும் பூதலூர் தாசில்தார் பிரேமா சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தங்களது கோரிக்கைகளை கலெக்டருக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த திட்டத்தை நிறுத்தாவிட்டால் வருகிற 13-ந்தேதி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டமும், 15-ந்தேதி பூதலூர் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டமும் நடைபெறும் என்று கிராமமக்கள் அறிவித்தனர்.
Related Tags :
Next Story