அரசு பஸ்சில் பயணம் செய்ய அமர்ந்திருந்த ஜோதிடர் திடீர் சாவு
அரசு பஸ்சில் பயணம் செய்ய அமர்ந்திருந்த ஜோதிடர் திடீரென இறந்தார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி செல்லக்கூடிய அரசு பஸ்சில் ஒருவர் பயணம் செய்வதற்காக அமர்ந்திருந்தார். அப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அருகில் இருந்தவர்கள் தண்ணீர் கொடுத்தபோது வேண்டாம் என்று அவர் மறுத்துள்ளார். மேலும் அவர் பஸ்சின் இருக்கையிலேயே சாய்ந்தார். இது குறித்த தகவலின்பேரில் அங்கு வந்த 108 ஆம்புலன்சில் இருந்த உதவியாளர், அந்த பயணியை பரிசோதனை செய்து, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கண்டக்டர் இளையராஜா ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் சுபா தலைமையிலான போலீசார், இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த செல்போன் மூலம் விசாரித்ததில் அவர் தஞ்சாவூர் மாவட்டம் கீழராஜவீதியை சேர்ந்த ரகுராம் சர்மா என்பதும், ஜோதிடம், வாஸ்து பார்ப்பது மற்றும் பட்டு நூல் வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவரது கைப்பையில் பட்டுநூல், தராசு உள்ளிட்ட பொருட்களும், ரூ.36,480 ரொக்கமும் இருந்ததை போலீசார் கைப்பற்றியதோடு, அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ரகுராம் சர்மாவின் மகள் சுமத்ரா, ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு வந்து, இறந்தது தனது தந்தைதான் என்பதை உறுதி செய்தார். மேலும் மருத்துவமனையில் இருந்து ரகுராம் சர்மாவின் உடலை பெற்று அடக்கம் செய்ய சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர். ரகுராம் சர்மா வைத்திருந்த பொருட்களை சுமத்ராவிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story