சுயேட்சையாக போட்டியிடும் அ.தி.மு.க. பிரமுகர், பணமோசடி வழக்கில் கைது
சுயேட்சையாக போட்டியிடும் அ.தி.மு.க. பிரமுகர், பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
அரியலூர்:
அரியலூர் சாக்கோட்டை தெருவில் வசிப்பவர் மணிவேல்(வயது 40). இவர் வீடு கட்டுவதற்காக செந்துறையில் இரும்பு கடை வைத்திருக்கும் ஜாகிர் உசேன் என்பவரிடம் இரும்பு கம்பிகளை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7-ந் தேதி வாங்கி உள்ளார். அதற்குரிய பணத்தை தருமாறு ஜாகீர் உசேன், மணிவேலிடம் பலமுறை கேட்டுள்ளார். தொடர்ந்து பணம் கேட்டு வந்த ஜாகீர் உசேனிடம், பணம் தரமுடியாது, உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்று மணிவேல் கூறி, மிரட்டியதாக கூறப்படுகிறது. இது பற்றி ஜாகீர் உசேன் அரியலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் விசாரணை நடத்தி, ரூ.4 லட்சத்து 52 ஆயிரத்து 673 ஏமாற்றியதாக மணிவேல் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தார். இதையடுத்து அரியலூர் 1-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட மணிவேலை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் சந்திரசேகர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அரியலூர் கிளை சிறையில் மணிவேல் அடைக்கப்பட்டார்.
அ.தி.மு.க. பிரமுகரான மணிவேலுக்கு தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட ‘சீட்’ தரவில்லை என்பதால், அரியலூர் நகராட்சி 16-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story