திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை: பண்ணாரியில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
திம்பம் மலைப்பாதையில் இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பண்ணாரியில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம்
திம்பம் மலைப்பாதையில் இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பண்ணாரியில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
போக்குவரத்துக்கு தடை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் திம்பம் மலைப்பாதை உள்ளது. 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதையானது சத்தியமங்கலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இதனால் இந்த மலைப்பாதையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அவ்வாறு செல்லும் வாகனங்களால் இரவு நேரங்களில் சிறுத்தை, மான், பாம்பு உள்பட பல்வேறு வனவிலங்குகள் அடிபட்டு இறந்து விடுகின்றன.
இந்த நிலையில் சத்தியமங்கலம் வனப்பகுதியில் வனவிலங்குகளின் உயிரிழப்பை தடுக்க பண்ணாரி- திம்பம் வனச்சாலையில் இரவு நேர போக்குவரத்தை தடை செய்து கடந்த 2019-ம் ஆண்டு ஈரோடு மாவட்ட கலெக்டர் வெளியிட்ட உத்தரவை பிப்ரவரி 10-ந் தேதி முதல் (அதாவது நேற்று) அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோரிக்கை
இந்த உத்தரவு காரணமாக மாலை 6 மணிக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய விவசாய பொருட்களை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகள் மற்றும் கோவை, தஞ்சை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும் கொண்டு விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும்.
இதனால் தாளவாடி மலைப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய விவசாயத்தை கைவிட்டு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகும் நிலை ஏற்படும். எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாளவாடி பகுதியை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆர்ப்பாட்டம்
மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பண்ணாரி சோதனை சாவடி அருகில் தாளவாடி மலைப்பகுதி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பிப்ரவரி 10-ந் தேதி காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று பகல் 11 மணி அளவில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம், தாளவாடி பொதுமக்கள், வியாபாரிகள், வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு பண்ணாரி சோதனை சாவடி அருகே வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்கு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், “நீக்கு நீக்கு திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கான தடையை நீக்கு” ஆகியவை உள்பட பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பின்னர் மதியம் 1.30 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
போலீஸ் குவிப்பு
இந்த ஆர்ப்பாட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் காரணமாக மாற்றுப்பாதையில் வாகனங்கள் சென்று வந்தன.
இதையொட்டி சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன் தலைமையில் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story