நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பீடித்தொழிலாளர்கள் முற்றுகை
நெல்லையில் கலெக்டர் அலுவலகத்தை பீடித் தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்
நெல்லை:
நெல்லையில் கலெக்டர் அலுவலகத்தை பீடித் தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
பீடி சுற்றும் பெண்கள்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள முத்துமாலைபுரம் கிராமத்தை சேர்ந்த பீடிசுற்றும் பெண்கள் பஞ்சாயத்து தலைவர் குமார் தலைமையில் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு நின்று முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-
நாங்கள் முத்துமாலைபுரம் கிராமத்தில் ஒரு பீடி கம்பெனி கிளையில் பல ஆண்டுகளாக பீடி சுற்றி, அதில் கிடைக்கும் கூலியை வைத்து குடும்பம் நடத்தி வருகிறோம். சமீபகாலமாக எங்களுக்கு கம்பெனி சார்பில் சரியாக வேலைவாய்ப்பு வழங்குவதில்லை. அதாவது பீடி சுற்றுவதற்கு தேவையான இலை, தூள் வழங்குவதில்லை. தற்போது கம்பெனி கிளையையும் மூடி விட்டார்கள். இதனால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.
உரிய நடவடிக்கை
இது தொடர்பாக நெல்லையில் உள்ள பீடி கம்பெனி அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டால் சரியாக பதில் சொல்லாமல் இழுத்தடித்து வருகிறார்கள். கடந்த ஆண்டுக்கான போனஸ் தொகையும் பீடித்தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை. மேலும் எங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கிலும் சந்தா பணம் செலுத்தவில்லை.
எனவே எங்களுக்கு போனஸ், வருங்கால வைப்பு நிதி பணத்தை நிர்வாகத்திடம் இருந்து பெற்றுத்தர வேண்டும். மேலும் தொடர்ந்து பீடி சுற்றும் தொழில் செய்வதற்கு உரிய ஏற்பாடும் செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story