முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பிரசாரம் ஈரோடு மாவட்டத்தில் 108 இடங்களில் பொதுக்கூட்டம் நடந்தது
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பிரசாரம் செய்தார். ஈரோடு மாவட்டத்தில் 108 இடங்களில் பொதுக்கூட்டம் நடந்தது.
ஈரோடு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பிரசாரம் செய்தார். ஈரோடு மாவட்டத்தில் 108 இடங்களில் பொதுக்கூட்டம் நடந்தது.
காணொலி காட்சி பொதுக்கூட்டம்
தமிழ்நாட்டில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்குகள் சேகரித்து தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஒவ்வொரு மாவட்ட வாக்காளர்களிடமும் பேசி வருகிறார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும், ‘உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி காணொலி பிரசார பொதுக்கூட்டம்’ நேற்று மாலை நடந்தது.
ஈரோடு தெற்கு மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்டம் என ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் இந்த காணொலி கூட்டம் நடத்தப்பட்டது. ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். அவரும், மாவட்ட நிர்வாகிகளும் ஈரோடு பெரியார் நகர் 80 அடி ரோடு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதுபோல் கோபி, பெருந்துறை உள்பட ஈரோடு மாவட்டத்தில் 108 இடங்களில் ஒரே நேரத்தில் காணொலி பொதுக்கூட்டம் நடந்தது.
முதல்-அமைச்சர் பேசினார்
இந்த கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து நேரலையில் வாக்காளர்களிடம் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர் சு.முத்துசாமி, வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி. ஆகியோர் பேசினார்கள். முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் நன்றி கூறினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினே ஒவ்வொருவரின் பெயரையும் அழைத்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.
காணொலி காட்சி என்பதால் ஒலி கேட்காதபோது அதை ஜாலியாக கமெண்ட் அடித்துக்கொண்டே அவர் பொதுக்கூட்டத்தை நடத்தியது அனைவரையும் கவர்ந்தது. மேலும், அவர் ஒலி வாங்கி சரியாக கேட்டதும் கட்டை விரலை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதும், அனைவரும் கைகளை உயர்த்தினார்கள்.
உணர்வு
இதுபோல் தொடக்கத்தில் முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலத்தை பேசுவதற்காக முதல்-அமைச்சர் அழைத்தார். அப்போது அவரது இணைப்பு சரியாக கிடைக்கவில்லை. எனவே ஈரோட்டில் இருந்து அமைச்சர் முத்துசாமி, வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவத்தை பேச வைக்கலாம் என்று கூறியதும், அவரது கருத்துக்கு மதிப்பளித்து உடனடியாக மாவட்ட செயலாளரை பேச வைத்தார்.
காணொலி காட்சி கூட்டமாக இருந்தாலும் பொதுக்கூட்டத்தில் பேசும் உணர்வோடு முதல்-அமைச்சர் பேசியது பார்வையாளர்கள் அனைவருக்கும் நேரடியாக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற உணர்வுதான் இருந்ததாக தெரிவித்தனர்.
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தன், வி.சி.சந்திரகுமார், மாவட்ட நிர்வாகிகள் குமார் முருகேஸ், தமிழ்நாடு கேபிள் டி.வி.தலைவர் குறிஞ்சி சிவக்குமார் உள்பட அனைத்து நிர்வாகிகள், வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story