மாணவர்கள் சீருடை அணிந்து பள்ளி-கல்லூரிகளுக்கு வர வேண்டும் - மந்திரி பி.சி.நாகேஸ் வேண்டுகோள்
மாணவர்கள் சீருடை அணிந்து பள்ளி-கல்லூரிகளுக்கு வர வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நாங்கள் விரும்பவில்லை
மாணவர்கள் சீருடை அணிந்து பள்ளி-கல்லூரிகளுக்கு வர வேண்டும். தேர்வு நெருங்குவதால் அரசின் உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும். கல்வி நிலையங்கள் என்பது மத வழிபாடுகளை மேற்கொள்ளும் இடம் கிடையாது. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வுகள் வருகிற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது. இந்த தேர்வுக்கு தயாராவதில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
மாணவர்களிடையே வேறுபாடுகள் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. மாணவர்கள், இந்து-முஸ்லிம் என்ற பாகுபாட்டை காட்டினால் அங்கே நல்ல முறையில் கல்வி கற்க முடியுமா?. ஹிஜாப் போன்ற உணர்வு பூர்வமான விஷயத்தில் பலர் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தை சில விஷமிகள் கையில் எடுத்து செயல்பட்டு வருகிறார்கள்.
மாணவர்களுக்கு உரிமை
மண்டியாவில் அல்லாஹு அக்பர் என்ற கோஷமிட்ட மாணவிக்கு சில அமைப்புகள் பரிசு வழங்குவதாக அறிவித்து இருப்பது குறித்து விசாரணை நடத்துவோம். தங்களின் மத நம்பிக்கைகளை கல்வி நிலையங்களில் பின்பற்ற மாணவர்களுக்கு உரிமை உண்டு என்று ஹிஜாப் வழக்கில் ஆஜராகும் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் கூறியுள்ளனர். இதன் நிலை என்ன என்பது அடுத்து வரும் நாட்களில் தெரியவரும்.
இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.
Related Tags :
Next Story