‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 11 Feb 2022 2:29 AM IST (Updated: 11 Feb 2022 2:29 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

உயர்மட்ட பாலம் வேண்டும் 
சிவகிரி அருகே கொங்குடையாம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட சேனாதிபதிபாளையம் என்ற இடத்தில் நொய்யல் ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர்கள் இல்லை. இதனால் இரவு நேரத்தில் வாகனங்கள் நிலை தடுமாறி ஆற்றின் உள் பகுதியில் விழவும் வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
பொதுமக்கள், சேனாதிபதிபாளையம்.


சிக்னல் அமைக்கப்படுமா?
ஈரோடு நாடார்மேடு அண்ணமார் பெட்ரோல் பங்க் பஸ் நிறுத்தம் பகுதியில் நால்ரோடு சந்திப்பு உள்ளது. ஈரோடு ரோடு, கரூர் ரோடு, அறச்சலூர் ரோடு, வாய்க்கால் மேடு பகுதி செல்லும் ரோடு ஆகியவை இங்கு சந்திக்கின்றன. இதனால் பகல் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகனங்கள் குறுக்கும், நெடுக்குமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காயத்ரி, ஈரோடு.


சரியாக மூடப்படாத குழி
கோபியில் உள்ள சத்தி ரோட்டில் அரசு சுற்றுலா பயணியர் விடுதி மற்றும் பெட்ரோல் பங்க் ஒன்றும் உள்ளது. அந்த ரோட்டில் ஏற்பட்ட குழியில் மண் போட்டு மூடப்பட்டு உள்ளது. ஆனால் அந்த குழி சரியாக மூடப்படவில்லை. மேடும், பள்ளமாக உள்ளது. இதனால் அந்த இடத்தில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இரவில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மேடு, பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே குழியில் மண் போட்டு மூடப்பட்ட இடத்தை மீண்டும் சீரமைத்து சமதளமாக மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், கோபி.


வேகத்தடை அமைக்க வேண்டும் 
நம்பியூர் பஸ் நிலையத்தில் 3 நுழைவு வாயில்கள் உள்ளன. இந்த நுழைவு வாயில்கள் வழியாக பஸ்கள் வேகமாக வருகின்றன. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பல முறை விபத்துகள் நடந்து உள்ளது. எனினும் விபத்தை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விபத்தை தடுக்கும் வகையில் பஸ் நிலையத்தின் நுழைவு வாயில்களில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், நம்பியூர்.

மேம்பாலம் தேவை 
அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் சாலையில் அந்தியூர் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறி ரோட்டில் செல்கிறது. இதனால் ரோட்டில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் நீரில் தவறி விழுந்து காயம் அடைகிறார்கள். மேலும் ஏரியில் இருந்து அதிக அளவில் உபரிநீர் வெளியேறினால் அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. எனவே பெரிய ஏரியில் இருந்து உபரி நீர் வெளிேயறும் இடத்தில் மேம்பாலம்  அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவீந்திரன், புதுப்பாளையம்.

Next Story