கோபி, அந்தியூருக்கு கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
கோபி நகராட்சி அலுவலகம் மற்றும் அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
ஈரோடு
கோபி நகராட்சி அலுவலகம் மற்றும் அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
59 வாக்குச்சாவடிகள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 22-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலையொட்டி கோபி நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் மொத்தம் 145 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக மொத்தம் 59 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
இதற்கான 71 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஈரோட்டில் இருந்து லாரி மூலமாக போலீஸ் பாதுகாப்புடன் கோபி நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன. இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆணையாளருமான பிரேம்ஆனந்த் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் நகராட்சி அலுவலகத்தின் மேலே உள்ள ஒரு தனி அறையில் அனைத்து கட்சி வேட்பாளர்கள் முன்னிலையிலும் வைக்கப்பட்டது. பின்னர் அந்த அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
மேலும் லக்கம்பட்டி, காசிபாளையம், கொளப்பலூர், கூகலூர் ஆகிய பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த அலுவலகங்களுக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் தனி அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அந்தியூர்
இதேபோல் அந்தியூர் பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வார்டுகளுக்கும் தேவையான 27 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. பின்னர் அந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள பதிவு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறை பூட்டப்பட்டு செயல் அதிகாரி சித்ரா முன்னிலையில் சீ்ல் வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த அறைக்கு ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story