திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை; தலைமை வன பாதுகாவலர் தகவல்
திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தலைமை வனப்பாதுகாவலர் நிஹர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தலைமை வனப்பாதுகாவலர் நிஹர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் தலைமை வனப்பாதுகாவலர் நிஹர் ரஞ்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
போக்குவரத்துக்கு தடை
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதிக்கு உள்பட்ட திம்பம் மலைப்பாதையில் விபத்துகளை தவிர்க்கவும், வன உயிர்களை பாதுகாக்கவும் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.
அதன்படி, பண்ணாரி சோதனைச்சாவடி முதல் ஆசனூர் சோதனைச்சாவடி வரையிலான மலைப்பாதையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வர்த்தக ரீதியிலான அனைத்து கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. மேலும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இலகு ரக வாகனங்கள் மற்றும் பயணிகளை ஏற்றிச்செல்லும் 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
அணுகு சாலை
பண்ணாரி சோதனைச்சாவடி முதல் ஆசனூர் சோதனைச்சாவடி வரை மலைப்பாதையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு கட்டணம் வசூலிக்கப்படும். அரசு, தனியார் பஸ்கள், ஆம்புலன்ஸ், மீட்பு வாகனங்களுக்கு கட்டணம் கிடையாது.
மேலும் கோவை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையான இந்த சாலையில் உள்ள கேர்மாளம், அரேபாளையம், திம்பம் சாலை மற்றும் தாளவாடி, கும்டாபுரம், புளிஞ்சூர், காரப்பள்ளம் அணுகு சாலைகளுக்கும் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தலைமை வனப்பாதுகாவலர் நிஹர் ரஞ்சன் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு சுமார் 10 லாரிகள் பண்ணரி சோதனை சாவடி வழியாக வந்து கொண்டிருந்தது. அந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது டிரைவர்கள் எங்களுக்கு தடை இருப்பது தெரியாது என்று கூறினர். எனினும் வாகனங்கள் அனைத்தும் ஓரமாக ஒரு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டன.
Related Tags :
Next Story