திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து தடையை கண்டித்து தாளவாடியில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்; புளிஞ்சூரில் சாலைமறியல்; கர்நாடக விவசாயிகள் 50 பேர் கைது


திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து தடையை கண்டித்து தாளவாடியில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்; புளிஞ்சூரில் சாலைமறியல்; கர்நாடக விவசாயிகள் 50 பேர் கைது
x
தினத்தந்தி 11 Feb 2022 2:57 AM IST (Updated: 11 Feb 2022 2:57 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்ததை கண்டித்து தாளவாடியில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி புளிஞ்சூர் சோதனை சாவடியில் சாலை மறியலில் ஈடுபட்ட கர்நாடக விவசாயிகள் 50 பேரை அந்த மாநில போலீசார் கைது செய்தனர்.

தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்ததை கண்டித்து தாளவாடியில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி புளிஞ்சூர் சோதனை சாவடியில் சாலை  மறியலில் ஈடுபட்ட கர்நாடக விவசாயிகள் 50 பேரை அந்த மாநில போலீசார் கைது செய்தனர். 
கடையடைப்பு போராட்டம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் உள்ள திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேர போக்குவரத்துக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனை சாவடி அருகே பிப்ரவரி 10-ந் தேதி காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என தாளவாடியை சேர்ந்த பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் அறிவித்து இருந்தனர்.
அதன்படி பண்ணாரி சோதனை சாவடி அருகே நேற்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மேலும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்தும் தாளவாடியில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என வியாபாரிகள் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று தாளவாடி, ஆசனூர், தலமலை பகுதியில் உள்ள காய்கறி மண்டி, டீக்கடைகள், மளிகை கடைகள், விவசாய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்பட பல்வேறு கடைகளை வியாபாரிகள் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பஸ்கள் ஓடின
கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் தாளவாடி பகுதியில் உள்ள ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டன. எனினும் தாளவாடியில் வழக்கம்போல் பஸ்கள் ஓடின. ஆனால் பஸ்சில் குறைந்த அளவிலான பயணிகளே இருந்தனர்.
இதனிடையே பண்ணாரியில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள வாகனங்களில் சென்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்களை தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி வண்டி எண், பெயர், முகவரி மற்றும் வாகனத்தில் எத்தனை பேர் செல்கின்றனர் என்ற விவரங்களை கேட்டு அறிந்து அனுப்பி வைத்தனர்.  
சாலை மறியல்
இந்த நிலையில் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தாளவாடியை அடுத்து தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள புளிஞ்சூர் சோதனை சாவடியில் கர்நாடக மாநில விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதையொட்டி கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்ட விவசாய சங்க தலைவர் பிரகாஷ் மற்றும் சாம்ராஜ் நகர் மாவட்ட லோக்கல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் என 50 பேர் நூதன முறையில் தலையில் கல்லை வைத்தபடி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். 
கைது
இதுகுறித்து சாம்ராஜ் நகர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் பிரகாஷ் கூறுகையில், ‘மாநில எல்லையில் அதிக அளவில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. உயர்நீதிமன்றத்தின் தடையால் எங்களுடைய விவசாய விளைபொருட்களை சத்தியமங்கலம், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க முடியாது. இந்த உத்தரவு விவசாயிகளான எங்கள் தலையில் கல்லை வைத்தது போன்று உள்ளது. மேலும் காலையில் வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் திம்பம் மலைப்பாதையில் செல்லும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே வருகிற 15-ந் தேதிக்குள் இந்த  உத்தரவை மறுபரிசீலனை செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படவிட்டால் தாளவாடி, சாம்ராஜ் நகர் மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்,’ என்றார். 
இதையொட்டி புளிஞ்சூர் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கர்நாடக மாநில போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 50 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 
இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக தமிழக- கர்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story