‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டது
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பேரூராட்சி சின்ன மாரியம்மன் கோவில் அருகில் பூலாம்பட்டி-ராசிபுரம் சாலை அருகே குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் சாலையில் ஆறாக ஓடியது. இதனால் சாலையோரமாக தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் என்று கடந்த 5-ந் தேதி ‘தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. உடனே நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய ‘தினத்தந்தி'க்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
-பொன்.மா.அறிவரசன், கொங்கணாபுரம், சேலம்.
===
தண்ணீர் வசதி கிடைக்குமா?
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 250 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மொத்தம் 6 கட்டிடங்கள் உள்ளன. மேலும் பள்ளி வளாகத்தில் 7 கழிப்பறைகள் உள்ளன. இதில் ஒரு கழிப்பறையில் கூட தண்ணீர் வருவது இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் சிரமமடைந்து வருகின்றனர். பள்ளி நேரத்தில் மாணவ-மாணவிகள் வெளியே செல்லும் மிகவும் இக்கட்டான சூழ்நிலை உள்ளது. எனவே கல்வித்துறை அதிகாரிகள் இந்த அரசு பள்ளி கழிப்பறைகளுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
கந்தசாமி, கடத்தூர், தர்மபுரி.
வைக்கோலுக்கு நிழற்கூடம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருந்து பள்ளிபாளையம் செல்லும் சாலையில் கவுரி பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நிழற்கூடத்தில் வைக்கோலை கட்டுகளாக அடுக்கி ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பயணிகள் வெயிலில் நின்று பஸ் ஏறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிழற்கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-ராம்குமார், குமாரபாளையம், நாமக்கல்.
===
சாக்கடை கால்வாய் வேண்டும்
சேலம் கிச்சிப்பாளையம், 43-வது வார்டு வ.உ.சி. நகர் பகுதியில் 3 மற்றும் 4-வது கிராஸ் பிரிவில் சாக்கடை கால்வாய் இல்லை. இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும் கொசுத்தொல்லை அதிகரித்ததுடன், துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. எனவே அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைத்து கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-.வ.உ.சி. நகர் மக்கள், கிச்சிப்பாளையம், சேலம்.
===
சிக்னல் விளக்குகள் சரிசெய்யப்படுமா?
சேலம் மாமாங்கம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சிக்னல் விளக்குகள் எரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பணி மற்றும் பள்ளி, கல்லூரி செல்பவர்கள் உரிய நேரத்தில் சென்றடைய முடியவில்லை. எனவே பொதுமக்களின் நலன்கருதி சிக்னல் விளக்குகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பெ.பழனிவேல், அய்யங்கரடு, சேலம்.
==
சாலையோரம் மணல்
சேலம் மாவட்டம் மேச்சேரி முதல் மேட்டூர் வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையின் ஓரம் மணல் குவிந்து கிடக்கின்றது. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் சாலையின் ஓரம் ஒதுங்கினாலும் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் குவிந்துள்ள மணலை அகற்றினால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
-கிருஷ்ணமூர்த்தி, மேட்டூர், சேலம்.
==
குப்பை வண்டி வருமா?
சேலம் அம்மாபேட்டை வித்யா நகரில் பல மாதங்களாக துப்புரவு பணியாளர்கள் வண்டியில் வந்து வீடுகளில் இருக்கும் குப்பைகளை வாங்கி செல்வதில்லை. இதனால் அந்த பகுதியில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. சிலர் குப்பைகளை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பை வண்டி வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆனந்த், வித்யா நகர், சேலம்.
==
பயன்பாட்டுக்கு வராத பாலம்
சேலம் உடையாப்பட்டி முதல் அயோத்தியாப்பட்டணம் வரையிலான நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வழிப்பாதை இரும்பு கம்பிகள் அமைத்து இரு வழியாக கடந்த 7 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருவழி பாதைக்காக போடப்பட்ட துணை பாலங்கள் அப்படியே பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி இருவழி பாதை பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சிவப்பிரகாசம், சேலம்.
==
சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படுமா?
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்த வெட்டுக்காடு தெருவில் சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் அடைப்பை சரி செய்ய வேண்டும் என் அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
சிங்காரம், வெண்ணந்தூர், நாமக்கல்.
Related Tags :
Next Story