இருவேறு விபத்துகளில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பலி


இருவேறு விபத்துகளில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 11 Feb 2022 4:28 AM IST (Updated: 11 Feb 2022 4:28 AM IST)
t-max-icont-min-icon

இருவேறு விபத்துகளில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

தாரமங்கலம்:
இருவேறு விபத்துகளில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
தனியார் நிறுவன ஊழியர்
ஓமலூர் அடுத்த பல்பாக்கி கிராமத்தை சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 21). டிப்ளமோ என்ஜினீயரான இவர் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் சேலத்தில் இருந்து வெள்ளாளப்பட்டிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். கரும்பாலை என்ற இடத்தில் சென்றபோது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி விழுந்ததில் தலை, கை கால்களில் படுகாயம் அடைந்தார்.
 இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்று வாலிபரை மீட்டு கருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் வாலிபர் மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு விபத்து
தாரமங்கலம் அருகே உள்ள சின்னபெரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன் (70). இவர் நேற்று முன்தினம் பவளத்தானூர் ரவுண்டானா பகுதியில் சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் பெரியண்ணன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர், தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார்.
இந்த விபத்து குறித்து பெரியண்ணனின் மகன் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story