வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 அணில் குரங்குகள் திருட்டு - பார்வையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 அணில் குரங்குகள் திருடப்பட்டது. இதையடுத்து பார்வையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை,
சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. பூங்காவில் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்ட இருப்பிடத்தில் 2 அரிய வகை ஆண் அணில் குரங்குகள் பொதுமக்கள் பார்வைக்காக விடப்பட்டிருந்தன.
நேற்று முன்தினம் மர்ம நபர்கள் பூங்காவுக்குள் நுழைந்து அணில் குரங்குகள் அடைத்து வைக்கப்பட்ட இரும்பு கூண்டில் உள்ள இரும்பு வேலியை வெட்டி அகற்றிவிட்டு அதில் இருந்த 2 ஆண் அணில் குரங்குகளை திருடிச்சென்று விட்டனர்.
இது குறித்து பூங்கா ஊழியர், அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பூங்கா வனசரக அலுவலர் வாசு, ஓட்டேரி போலீசில் அரிய வகை ஆண் அணில் குரங்குகள் திருட்டு போனது குறித்து புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வண்டலூர் உயிரியல் பூங்காவில் அணில் குரங்குகள் பராமரிக்கப்பட்ட கூண்டை பார்வையிட்டனர். அப்போது போலீசார், பூங்கா ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் நடந்த சம்பவத்தை பற்றி விசாரித்தனர்.
மேலும் பூங்காவில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து உள்ளனர். இது குறித்து ஒட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிய வகை 2 அணில் குரங்குகளை திருடிய மர்ம நபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேலும் திருடிய அணில் குரங்குகளை வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல வாய்ப்புள்ளதால் விமான நிலையம், துறைமுகம் போன்ற பகுதிகளில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
பூங்காவில் அரிய வகை அணில் குரங்குகள் திருட்டு சம்பவம் எதிரொலியாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் சார்பில் பூங்காவின் நுழைவுவாயில், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட 3 இடங்களில் பார்வையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் பூங்காவில் இருந்து 5 மணிக்குள் வெளியேற வேண்டும். தவறும் பட்சத்தில் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறுகையில்:-
தென் ஆப்பிரிக்கா பகுதியில் காணப்படும் அரிய வகையை சேர்ந்த 2 ஆண் அணில் குரங்குகள் கடந்த 2018-ம் ஆண்டு சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டு வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு பராமரித்து வந்தோம், பார்ப்பதற்கு முகம் மட்டும் குரங்கு தோற்றத்திலும், வால் பகுதி முதல் கழுத்துவரை அணில் உடல் அமைப்பில் காணப்படும், இந்த அணில் குரங்கு அரிய வகை என்பதால் சர்வதேச சந்தையில் இதற்கு அதிக மதிப்பு உண்டு. அணில் குரங்குகள் திராட்சை, அன்னாசி, வெள்ளரிக்காய், கேரட் போன்றவைகளை உணவாக உட்கொள்ளும், மனிதர்களிடம் மிகவும் சாதுவாக பழக கூடியது. இந்த குரங்குகள் எப்படி திருட்டுபோனது என்பது குறித்து பூங்கா தரப்பிலும் விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story