‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 11 Feb 2022 7:11 AM IST (Updated: 11 Feb 2022 7:11 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கழிவுநீர் பிரச்சினை முடிவுக்கு வந்தது

சென்னை தண்டையார்ப்பேட்டை வ.உ.சி.நகர் 37-வது பிளாக் பகுதியில் பாதாள சாக்கடை மூடி வழியாக கழிவுநீர் வெளியேறி கொண்டிருப்பதும், அந்த கழிவுநீர் அருகேயுள்ள குடியிருப்பு பகுதிகளில் நுழைவதும் குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து அந்த பிரச்சினை உடனடியாக சரிசெய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

குப்பை கழிவுகள் உடனடி அகற்றம்

சென்னை அடையாறு பள்ளிப்பட்டு வாக்குச்சாவடி அருகே சாலையோரம் குப்பை கழிவுகள் தேங்கியிருப்பது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையால் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு, அந்த இடமே தூய்மையாகி இருக்கிறது.

பாதசாரிகளுக்கு இடையூறு

சென்னை பாரிமுனை தம்பு செட்டி தெருவில் பாதசாரிகளுக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் நடந்து செல்ல பாதசாரிகள் சிரமப்படுகிறார்கள். இந்த போக்கும் தினமும் தொடர்கதையாகி வருகிறது. போலீசாரும் இதனை கண்டுகொள்வதில்லை.

- சமூக ஆர்வலர்.

ஆபத்தான மின் இணைப்பு பெட்டி

சென்னை அயனாவரம் அம்பேத்கர்நகர் 2-வது தெருவில் (இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி பின்புறம்) மின் இணைப்பு பெட்டி ஒன்று உள்ளது. கதவுகள் பெயர்ந்தும், வயர்கள் வெளியே நீட்டிக்கொண்டும் அபாயகரமாக காட்சியளிக்கிறது. ஏராளமான குழந்தைகள் விளையாடும் இப்பகுதியில் உள்ள ஆபத்தான இந்த மின் இணைப்பு பெட்டி சீரமைக்கப்படுமா?

-பொதுமக்கள், அம்பேத்கர்நகர் 2-வது தெரு.

நடவடிக்கை எடுப்பார்களா?

சென்னையை அடுத்த பூந்தமல்லி சென்னீர்குப்பம் துளசி நகர் லட்சுமிநாராயணன் தெருவில் கழிவுநீரும், குப்பைகூளமும் கலந்து அலங்கோலமாக காட்சி தருகிறது. அந்த பகுதியில் யாரும் நடந்து செல்லவே முடியாத நிலை நிலவுகிறது. தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் படையெடுப்பதால் பல்வேறு நோய்களுக்கு அருகேயுள்ள குடியிருப்புவாசிகள் ஆளாகிறார்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

- துளசிநகர் மக்கள்.

தெருவிளக்கு வசதி தேவை

சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள எம்.எம்.டி.ஏ. காலனி எச்.பிளாக் மற்றும் ஐ பிளாக் தெருவில் தெருவிளக்கு வசதியில்லை. இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் இத்தெரு மக்கள் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். வாகன ஓட்டிகளும் இடையூறை எதிர்கொள்கிறார்கள். எனவே இத்தெருவில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- பொதுமக்கள், எம்.எம்.டி.ஏ. காலனி.

மழைநீர் வடிகால்வாய் சேதம்

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி எம்.ஜி.ஆர்.நகர் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் பாதை சேதமடைந்து உள்ளது. மேற்பகுதி உடைந்திருப்பதால் குப்பை கழிவுகள் மழைநீர் கால்வாயில் கலப்பதற்கு வாய்ப்புள்ளது. எனவே உடைந்து கிடக்கும் இந்த மழைநீர் கால்வாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சமூக ஆர்வலர்.

இடையூறாக இருக்கும் மின்கம்பம்

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கம் மாறன் கார்டன் செல்லும் வழியில் உள்ள ஜெயலட்சுமி நகர் 5-வது தெரு சந்திப்பில் சாலைக்கு நடுவே உள்ள மின்கம்பம் இருக்கிறது. இதனால் அச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் பலர் எதிர்பாராத விபத்தில் சிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே இடையூறாக இருக்கும் இந்த மின்கம்பம் அகற்றி அருகே நடுவதற்கு மின்வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்குமா?

- எஸ்.சூரியநாராயணன், காட்டுப்பாக்கம்.

பயணிகள் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் கிராமத்தில் இருந்து பூந்தமல்லி மற்றும் செங்குன்றம் வரை மாநகர பஸ் சேவை இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே பயணிகள் நலன் கருதி மேற்கண்ட வழித்தடத்தில் மீண்டும் மாநகர பஸ்கள் இயக்கப்படுமா?

- முருகன், வெங்கல்.

சாய்ந்து இருக்கும் டிரான்ஸ்பார்மர்

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள கன்னிவாக்கத்துக்கு அடுத்துள்ள அண்ணாநகர் பஸ் நிலையம் அருகே சாலையோரம் உள்ள டிரான்ஸ்பார்மர் சாய்ந்த நிலையில் இருக்கிறது. எனவே மக்கள் நலன் கருதி மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக கள ஆய்வு செய்து, இந்த பிரச்சினையை சரிசெய்ய வேண்டும். இதனால் தேவையில்லாத அசம்பாவிதமும் தவிர்க்கப்படும்.

- ம.செல்வசதீஷ், கன்னிவாக்கம்.

Next Story