பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 4 வாலிபர்கள் கைது
கோவில்பட்டியில் சாலையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் சாலையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆயுதங்களுடன் வாலிபர்கள்
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மெயின்ரோடு பகுதியில் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அரிவாள் மற்றும் வாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மர்மநபர்கள் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில், கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தலைமையில் தனிப்படை போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.
4 பேர் சிக்கினர்
அப்போது கோவில்பட்டி, வள்ளூவர் நகர், சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்த மந்திரமூர்த்தி (வயது 29), கருப்பசாமி ( 20), மதன்குமார் (25), பரமசிவன் ( 27) ஆகிய 4 பேர் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் அரிவாள் மற்றும் வாள் போன்ற பயங்கரமான ஆயுதங்களுடன் சுற்றி திரிந்தது தெரியவந்தது.
இதனையடுத்து தனிப்படை போலீசார் 4 பேரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். அந்த 4 பேரும் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 4 பேரையும் கைது செய்தனர்.
போலீசார் தீவிர விசாரணை
மேலும் இந்த 4 பேர் மீதும் எந்த வழக்கும் உள்ளதா? எதற்காக ஆயுதங்களுடன் சாலையில் சுற்றித்திரிந்தனர்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story