பேரூராட்சி அலுவலகத்தில் மனைவியுடன் சுயேச்சை வேட்பாளர் தர்ணா போராட்டம்
வாக்கு சேகரிக்க விடாமல் தேர்தல் அலுவலர் தடுப்பதாக கூறி பேரூராட்சி அலுவலகத்தில் மனைவியுடன் சுயேச்சை வேட்பாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் கோத்தகிரியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி
வாக்கு சேகரிக்க விடாமல் தேர்தல் அலுவலர் தடுப்பதாக கூறி பேரூராட்சி அலுவலகத்தில் மனைவியுடன் சுயேச்சை வேட்பாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் கோத்தகிரியில் பரபரப்பு ஏற்பட்டது.
சுயேச்சை வேட்பாளர்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கிளப்ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது யாகூப்(வயது 38). வியாபாரியான இவர், வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோத்தகிரி பேரூராட்சி 11-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
இதற்கிடையில் முகமது யாகூப்புக்கு, கோத்தகிரி காந்தி மைதானம் அருகே தள்ளுவண்டியில் ‘பாஸ்ட் புட்’ கடை நடத்த பேரூராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கியதாக தெரிகிறது. ஆனால் தற்போது அதே இடத்தில் வெளியூரை சேர்ந்த ஒருவருக்கு கடை அமைக்க செயல் அலுவலர் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.
தீக்குளிக்க முயற்சி
இதை கண்டித்தும், அந்த இடத்தை கடை அமைக்க தனக்கு ஒதுக்கக்கோரியும் கடந்த 8-ந் தேதி பேரூராட்சி அலுவலகம் முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். எனினும் அந்த இடத்தில் வெளியூரை சேர்ந்த நபர், கடை அமைக்கும் பணியை தொடங்கினார்.
இதனால் நேற்று ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார், முகமது யாகூப். உடனே அவரை போலீசார் தடுத்து காப்பாற்றினர். மேலும் பிரச்சினைக்குரிய அந்த இடத்தில் தேர்தல் முடியும் வரை கடை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படாது என்று அதிகாரிகள் உறுதி அளித்ததாக தெரிகிறது.
தர்ணா போராட்டம்
இந்த நிலையில் இன்று காலையில் அந்த இடத்தில் தள்ளுவண்டி கடையை வெளியூரை சேர்ந்த நபர் அகற்றிவிட்டு, புதிய கடை அமைக்கும் பணியை மேற்கொண்டதாக தெரிகிறது. இதை கண்டித்து கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்துக்கு தனது மனைவியுடன் வந்த முகமது யாகூப் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் வாக்கு சேகரிக்க செல்ல விடாமல் தடுக்க தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை மற்றொருவருக்கு செயல் அலுவலரும், தேர்தல் அலுவலருமான மணிகண்டன் திட்டமிட்டு வழங்கி இருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் பேச்சுவார்த்தை நடத்த வந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் தேர்தல் முடியும் வரை அந்த இடத்தில் புதிய கடை அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்படும், அங்கிருந்து அகற்றப்பட்ட தள்ளுவண்டி மீண்டும் அதே இடத்தில் வைக்கப்படும் என்று பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் உறுதி அளித்தனர். இதை ஏற்று முகமது யாகூப் தனது மனைவியுடன் நடத்திய போராட்டத்தை கைவிட்டார். இதனால் அங்கு சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story