முதுமலை புலிகள் காப்பகத்தை விரிவுபடுத்தக்கூடாது
முதுமலை புலிகள் காப்பகத்தை விரிவுபடுத்தக்கூடாது என்று நீலகிரி வனக்கோட்ட அலுவலரிடம் தோடர் இன மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
ஊட்டி
முதுமலை புலிகள் காப்பகத்தை விரிவுபடுத்தக்கூடாது என்று நீலகிரி வனக்கோட்ட அலுவலரிடம் தோடர் இன மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
வாழ்வாதாரம் பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தோடர் இன மக்கள் இன்று நீலகிரி வனக்கோட்ட அலுவலர் சச்சினிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
நீலகிரியில் கடந்த பல ஆண்டுகளாக வனப்பகுதிகளை ஒட்டி வாழ்ந்து வருகிறோம். வனப்பகுதிகளில் பல வகையான காடுகள் சூழ்ந்து உள்ளதோடு, வனவிலங்குகள் வாழும் இடமாக அமைந்து உள்ளது.
இதுவரை நாங்கள் வனவிலங்குகளை பாதுகாத்து வாழ்ந்து வருகிறோம். கடந்த சில ஆண்டுகளாக யானை வழித்தடம் என்ற அறிவிப்பு வெளிவந்து மசினகுடி, ஸ்ரீ மதுரை பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
நிறுத்த வேண்டும்
தற்போது முதுமலை புலிகள் காப்பகத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
நடுவட்டம், முள்ளிகூர், சோலூர், உல்லத்தி, நஞ்சநாடு, எப்பநாடு ஆகிய கிராமங்கள் புலிகள் காப்பகத்தின் கீழ் கொண்டு வரப்பட இருக்கிறது. அவ்வாறு நடந்தால் பழங்குடியின மக்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். புலிகள் காப்பகம் என்ற பெயரில் விரிவுபடுத்தும் பணியை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தடையில்லா சான்று
இதேபோல் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனரிடமும் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து தோடர் இன மக்கள் நிருபர்களிடம் கூறும்போது, முதுமலை புலிகள் காப்பகத்தை விரிவுபடுத்த கூடாது என்று மனு அளித்து உள்ளோம். மந்துகளில் வசிக்கும் நாங்கள் வனப்பகுதிகள் வழியாக சென்று வருகிறோம்.
பெரும்பாலும் மண் சாலையாக இருப்பதால் மழை நேரங்களில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்லவோ, அவசர நேரத்தில் மருத்துவமனைக்கு செல்லவோ முடிவதில்லை. எனவே சாலை அமைக்க நீலகிரி வனக்கோட்ட அலுவலர் தடையில்லா சான்று வழங்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story