வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி
விழுப்புரம் நகராட்சியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி நடைபெற்றது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வினியோகம் செய்ய மாவட்ட கூட்டுறவு அச்சகத்தில் பூத் சிலிப் அச்சடிக்கப்பட்டு அவை அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பூத் சிலிப்புகள் இன்று (சனிக்கிழமை) முதல் வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இவற்றை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்க உள்ளனர்.
இதையொட்டி அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு நேற்று பூத் சிலிப்புகளை அந்தந்த நகராட்சி, பேரூராட்சி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வழங்கினர். அந்த வகையில் விழுப்புரம் நகராட்சியின் 42 வார்டுகளுக்குட்பட்ட 129 வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேந்திரஷா, பூத் சிலிப்புகளை வழங்கினார். அப்போது வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை 13-ந் தேதிக்குள் (நாளை) முடிக்க வேண்டும். அப்பணியை மேற்கொள்ளும்போது மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில் எந்தவித புகார்களுக்கும் இடமின்றி பணிகளை மேற்கொள்ளும்படி உரிய அறிவுரைகளை வழங்கினார். அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story