ஆன்லைன் மூலம் லாட்டரி விற்றவர் கைது


ஆன்லைன் மூலம் லாட்டரி விற்றவர் கைது
x

விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.3½ லட்சம், கார் பறிமுதல் செய்யப்பட்டது.

விக்கிரவாண்டி, 

விழுப்புரம், கடலூர், புதுச்சேரி பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை நடைபெறுவதாகவும், விழுப்புரத்தை சேர்ந்த ஒருவர் மூலையாக செயல்படுவதாகவும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த துணை போலீஸ் சூப்பிரண்டு  பார்த்தீபன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். 
இந்த தனிப்படையில் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகர், போலீஸ்காரர்கள் குமரகுரு, மகாராஜா, சபாபதி, தினகரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 

பறிமுதல் 

இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று மதுரபாக்கம் புற்றுக்கோவில் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார், போலீசார் மீது மோதுவதுபோல் வந்து வேகமாக சென்றது. இதையடுத்து போலீசார், தங்களது வாகனங்களில் விரட்டிச்சென்று காரை மடக்கினர். 
காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், விழுப்புரம் வடக்கு கணபதி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ஸ்ரீதர்(வயது 40) என்பதும், ஆன்லைன் மூலம் லாட்டரி விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.3 லட்சத்து 58 ஆயிரம் ரொக்கம், 3 விலை உயர்ந்த செல்போன், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story