தேர்தல் பிரசார கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு
ஒரே குடும்பத்தில் 2 பேர் போட்டியிடுகிறார்கள். உள்ளாட்சியிலும் குடும்ப ஆட்சியை கொண்டுவரப்போகிறார்கள் என்று விழுப்புரம் தேர்தல் பிரசார கூட்டத்தில் அண்ணாமலை பேசினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் நேற்று காலை விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தை பொறுத்தவரை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறதா என்று சொன்னால் நிச்சயமாக கிடையாது. மக்களின் வாழ்க்கைத்தரத்தில் எந்த மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தி.மு.க. ஆட்சி மீது சலிப்பு
மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுப்பீர்கள் என்று சொன்னீர்களே, கொடுத்தீர்களா? அதுபற்றி கேட்டால் இன்னும் 4 ஆண்டுகள் இருக்கிறது, அதற்குள் நாங்கள் கொடுப்போம் என்று தி.மு.க. கூறுகிறது. 4 ஆண்டுகள் இருக்கிறது, ஆனால் நீங்கள் ஆட்சியில் இருக்க வேண்டுமே?. இதே நிலைமை சென்றால் ஏதோ 80 ஆண்டுகள் ஒரு கட்சியே ஆட்சி செய்தால் எப்படி ஒரு சலிப்பு வருமோ அவ்வளவு சலிப்பு இந்த 8 மாத கால ஆட்சியிலேயே தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
பா.ஜ.க.வின் லட்சியம்
பா.ஜ.க. கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசுவது, கட்சி அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களை கிழிப்பது, வாக்கு சேகரிக்க செல்லும் பா.ஜ.க. வேட்பாளர்களை மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
ஏனெனில் இன்றைக்கு பா.ஜ.க. மட்டும்தான் தமிழகத்தில், தி.மு.க. அரசு செய்யும் தவறை துணிவாக தட்டிக்கேட்டு ஊழலை தடுத்துக் கொண்டிருக்கிறது. ஊழல் இல்லாத ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் லட்சியம்.
உள்ளாட்சியிலும் குடும்ப ஆட்சி...
கோபாலபுரம் மாடலை இப்போது தமிழகத்தில் பட்டி, தொட்டி எங்கும் கொண்டு சென்று நகராட்சி, பேரூராட்சி தேர்தலிலும் கொண்டு வந்து விட்டனர். கோபாலபுரத்தில் மட்டும்தான் ஒரு குடும்பம் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறது என்றால் இப்போது நகராட்சி, பேரூராட்சி தேர்தலிலும் தங்கள் குடும்பத்தினர் பதவியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டனர். நகராட்சி, பேரூராட்சிகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர், 3 பேர் போட்டியிடுகிறார்கள். உள்ளாட்சியிலும் குடும்ப ஆட்சியை கொண்டுவரப்போகிறார்கள். ஆனால் பா.ஜ.க.வினர் உங்களின் உணர்வுகளை முழுமையாக தெரிந்தவர்கள், அதையும் தாண்டி உங்களது வலியை தெரிந்தவர்கள். உள்ளாட்சியில் நல்லாட்சி தர வேண்டும் என்று சொன்னால் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெற செய்யுங்கள்.
ஸ்டிக்கர் ஒட்டுவதில் போட்டி
தமிழகத்தை பொறுத்தவரை ஸ்டிக்கர் ஒட்டுவதில் பெரிய போட்டி இருக்கிறது. மத்திய அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதில் தி.மு.க.வினர் ஸ்டிக்கர் ஒட்டி நாங்கள்தான் கொண்டு வந்தோம் என்று பரப்புரை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த தேர்தலில் போட்டியிட தி.மு.க.வை விட அதிக இடங்களை சிறுபான்மை சமூகத்திற்கு பா.ஜ.க. வழங்கியுள்ளது. ஆனால் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்று சாதி ரீதியாக, மத ரீதியாக மக்களை பிரித்து பார்த்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
மக்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கடமையை செய்பவர்கள் நாங்கள்.
பொய் பிரசாரத்தை நம்பாதீர்கள்
இன்னும் 2 நாளில் 500 ரூபாய் கொடுக்கிறோம், ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம் என்று வருவார்கள், வாங்கிக்கொள்ளுங்கள், அது உங்களுடைய பணம்தான். ஆனால் அவர்கள் அந்த பணத்தை எப்படி கொடுக்கிறார்கள், எந்த திட்டத்தில் இருந்து கமிஷன் வாங்கிக்கொண்டு கொடுக்கிறார்கள் என்று சற்று யோசித்து பாருங்கள். அது இந்தமுறை நடக்காது, பா.ஜ.க. அதற்கு அனுமதிக்காது. மக்களை நம்பி மட்டும்தான் எங்களது வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள். கட்சியின் பணி, பிரதமர் மோடியின் பணியை பார்த்து அவர்களுக்கு வாய்ப்பு அளியுங்கள், நல்ல மனிதர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். அவர்களை தேர்ந்தெடுங்கள், பொய் பிரசாரத்தை நம்பாதீர்கள். உண்மையை மட்டுமே நம்புங்கள். தி.மு.க. செய்யும் தவறையும், பா.ஜ.க. செய்யும் நல்லதையும் மறக்காதீர்கள். தாமரைக்கு ஓட்டு, பா.ஜ.க.விற்கு ஓட்டு, மோடிக்கு ஓட்டு, நல்லவர்களுக்கு ஓட்டு இந்த 4 விஷயங்களை மட்டுமே மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story