வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்
கரூர்
7 வாக்கு எண்ணும் மையங்கள்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரபுசங்கர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறியாதவது:-
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்கு எண்ணும் மையங்களில் போதிய முன்னேற்பாட்டு பணிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து இன்று (அதாவது நேற்று) ஆய்வு செய்யப்படுகின்றது.
கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 7 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியும், புகழூர் நகராட்சி, புஞ்சைத்தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்கு புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், பள்ளப்பட்டி நகராட்சிக்கு உஸ்வத்துன் ஹசானாமாமாஞ்சி ஹாஜி அப்துல் லத்தீப் மகளிர் கல்லூரியும், குளித்தலை நகராட்சிக்கு குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், புலியூர் மற்றும் உப்பிடமங்கலம் பேரூராட்சிகளுக்கு புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியும், மருதூர், நங்கவரம், கிருஷ்ணராயபுரம், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் ஆகிய பேரூராட்சிகளுக்கு மாயனூர் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனமும், அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியும் வாக்கு எண்ணும் மையங்களாக அமைக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி மையங்கள்
இந்த வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் உட்புறமும், வெளிப்புறமும் மற்றும் வாக்கு எண்ணும் அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சியில் 191 வாக்குச்சாவடிகளும், 3 நகராட்சிகளிலும் சேர்த்து 91 வாக்குச்சாவடிகளும், 8 பேரூராட்சிகளுக்கும் சேர்த்து 124 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 406 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 406 வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.
இதில் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் மற்றும் மிகவும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக 91 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த 91 வாக்குச்சாவடி மையங்களிலும் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்படுவதோடு, வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடவடிக்கைகளை கண்காணித்திட சிசிடிவி மற்றும் வாக்குப்பதிவை நேரலையில் கண்காணித்திடும் வெப் ஸ்டீரீமிங் வசதியும் செய்யப்படும்.
கண்காணிப்பு கேமராக்கள்
வாக்கு எண்ணும் மையங்களில், வேட்பாளர்களும், அவர்களின் முகவர்களும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்வதற்கும், அரசு அலுவலர்கள் செல்வதற்கும் பிரத்யேக வழிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்றும், பாதுகாப்பு அறையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்து வரும் வழியில் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தேவையான இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தடுப்புகள் அமைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்கு எண்ணும் மேடைகள் மற்றும் சுற்றுகள் அமையும். காவல்துறையின் சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவா் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பாதேவி, தேர்தல் நடத்தும் அலுவலர்களான கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், குளித்தலை நகராட்சி ஆணையர் சுப்புராம், பள்ளப்பட்டி நகராட்சி ஆணையர் கோபாலகிருஷ்ணன், அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ், புலியூர் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், உப்பிடமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் பானுஜெயராணி, பழையஜெயங்கொண்டம் செயல் அலுவலர் குமாரவேலன், நங்கவரம் செயல் அலுவலர் வேல்முருகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story