‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ராஜா காலனி வழியாக செல்லும் சாலையின் குறுக்கே கழிவுநீர் செல்வதற்காக சிறிய பாலம் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் இந்த பாலம் சாலையை விட சற்று உயரமாக உள்ளதால் அந்த வழியாக அதிவேகமாக வாகனங்களில் செல்வோர் மற்றும் இரவு நேரங்களில் செல்வோர் கீழே விழுந்து காயம் அடைந்து வந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த சாலையை சீரமைத்தனர். எனவே செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
கிருபாகரன், ராஜா காலனி திருச்சி.
அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தெரணியில் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். ஆனால் இப்பகுதி மக்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. எனவே ராணி மங்கம்மாள் பகுதியில் உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும். இப்பகுதியில் கழிப்பறை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே கழிப்பறை அமைத்து தருவதுடன், கழிவுநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும். மேலும் இங்குள்ள சுடுகாட்டில் தகனமேடை அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பெரம்பலூர்.
செடி, கொடிகளை அகற்ற வேண்டும்
கரூர் மாவட்டம் நடையனூில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்டோர் படித்து வருகிறார்கள். இந்தநிலையில், பள்ளியின் பின்புறம் செல்லும் உபரி நீர் கால்வாயில் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொசு கடித்து டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது . எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சதாசிவம், கரூர்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சி அம்பேத்கர் தெருவில் எம்.ஜி.ஆர். சிலை முதல் கால்நடை மருத்துவமனை வரை உள்ள சாக்கடையில் குப்பைகள் அதிகளவில் தேங்கி உள்ளன. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும், அப்பகுதியில் கொசு தொல்லையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த குப்பைகளை உடனடியாக அகற்றுவதுடன், கொசுமருந்து தெளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராணி, பெரம்பலூர்.
Related Tags :
Next Story