பூத்சிலிப் வழங்கும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை
பூத் சிலிப் வழங்கும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டி,
பூத் சிலிப் வழங்கும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல் விதிமுறை
தொண்டி பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கூட்டம் தனியார் திருமண மகாலில் நடைபெற்றது. தாசில்தார் செந்தில்வேல் முருகன் தலைமை தாங்கினார்.
இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வராஜ், தேர்தல் பார்வை யாளர் செல்வம், தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் லியோ ஜெரால்டு எமர்சன், ஜீவானந்தம், மண்டல தேர்தல் அலுவலர் ரவி, மண்டல தேர்தல் உதவியாளர் கருப்பையா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என விளக்கம் அளித்தனர். அப்போது மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்புவதற்கு கணினி மூலம் குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு அதற்கான எண்கள் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.
நடவடிக்கை
தாசில்தார் செந்தில்வேல் முருகன் பேசியதாவது:- தொண்டி பேரூராட்சியில் அனைத்து வார்டுகளிலும் பூத் சிலிப் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இடையூறு செய்தால் வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வீடு வீடாக வாக்கு சேகரிக்க செல்லும் வேட்பாளருடன் கூடுதலாக 2 நபர்கள் மட்டுமே செல்லவேண்டும். இந்த தேர்தலில் நோட்டா இல்லை. அதேபோல் வி.வி. பேடு பயன்படுத்த படவில்லை.
ஒலிபெருக்கி மற்றும் வாகன அனுமதி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் தான் பெற வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மேலும் தேர்தல் விதிகளை கடைப்பிடிக்காத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் பணிகள் குறித்தும் தாசில்தார் செந்தில்வேல் முருகன், உதவி தேர்தல் அலுவலர் லியோ ஜெரால்டு எமர்சன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி ஆகியோர் தெரிவித்தனர். இதில் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story