கோஷ்டி மோதலில் படுகாயம் அடைந்தவர் சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
சுல்தான்பேட்டை அருகே இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் படுகாயம் அடைந்தவர் உயிரிழந்ததை தொடர்ந்து கொலை வழக்காக மாற்றப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை அருகே இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் படுகாயம் அடைந்தவர் உயிரிழந்ததை தொடர்ந்து கொலை வழக்காக மாற்றப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இருதரப்பினர் இ்டையே மோதல்
சுல்தான்பேட்டை அருகே உள்ள பொன்னாக்காணியை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 69). இவர் கடந்த 7-ந் தேதி மொபட்டில் சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராமு என்கிற கேசவன் (45) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், மயில்சாமி மொபட்டும் மோதியது. இதில் மயில்சாமிக்கு காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக இருதரப்பினர் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. இதனால் இருதரப்பை சேர்ந்த ஆதரவாளர் களும் ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். இதில் சில வீடுகளும் சூறையாடப்பட்டன. இதில் படுகாயம் அடைந்த சிலர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
7 பேர் கைது
இது தொடர்பாக 14 பேர் மீது சுல்தான்பேட்டை போலீசார் கொலை முயற்சி, வன்கொடுமை, அத்துமீறி நுழைந்து தாக்குதல், சட்டவிரோதமாக கூடுதல் உள்பட 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக போகம்பட்டியை சேர்ந்த பாலகுரு (23), பூபதி (36), மோகன்ராஜ் (33), மயில்சாமி (69), மாரிமுத்து (45), செந்தில் (39), கணேசன் (41) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
தொழிலாளி உயிரிழப்பு
இந்த நிலையில், கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கேசவன் உடல்நிலை மோசமானது. இதனால் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கேசவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 7 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
2 பேர் கோர்ட்டில் சரண்
இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக போகம்பட்டியை சேர்ந்த மணிவாசகம் என்கிற விக்னேஷ் (30), சுப்பிரமணியன் (45) ஆகியோர் நேற்று கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டில் நீதிபதி சக்திவேல் முன்னிலையில் சரண் அடைந்தனர். இதையடுத்து 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் கேசவனின் உறவினர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அனைவரையும் பிடித்தால் மட்டுமே கேசவனின் உடலை வாங்குவோம் என்றுக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதை தொடர்ந்து ஒரு தரப்பினர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர்.
கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்று கலெக்டர் சமீரன் உறுதி அளித்ததால், ஒரு தரப்பினர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து உடலை வாங்கி சென்றனர்.
Related Tags :
Next Story