திருமுருகநாதசுவாமி கோவில் தேர்த்திருவிழா
திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அனுப்பர்பாளையம்
திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருமுருகநாதசுவாமி கோவில்
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் பிரசித்தி பெற்ற திருமுருகநாதசுவாமி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் மாசி மாதம் கோவிலில் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்த்திருவிழா நேற்றுகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி முருகநாதசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட கொடியை கோவில் வளாகத்தை சுற்றி வந்து, பஞ்ச வாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து உற்சவமூர்த்திகள் பிரகார உலா, பஞ்சமூர்த்திகளின் திருவீதி உலா ஆகியவை நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) சூரிய, சந்திர மண்டல காட்சிகளும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) பூதவாகனம், சிம்ம வாகன காட்சிகளும், 14-ந்தேதி புஷ்ப விமான காட்சியும், 15-ந்தேதி பஞ்ச மூர்த்திகளுடன் ரிஷப வாகன காட்சியும், 16-ந்தேதி திருக்கல்யாணம் மற்றும் யானை வாகனம், அன்ன வாகன காட்சிகளும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது. 19-ந்தேதி தெப்பத்தேர் விழாவும், 20-ந்தேதி ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழாவும், 21-ந்தேதி பிரம்மதாண்டவ தரிசன காட்சியும் நடைபெற உள்ளது. 22-ந்தேதி மஞ்சள் நீர்விழா, மயில் வாகன காட்சியுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.
தேர்த்திருவிழா
நேற்று முன்தினம் இரவு கிராம சாந்தி பூஜை கோவில் வளாகத்தில் நடைபெற்றது. ஆண்டுதோறும் 2 நாட்கள் தேர்த்திருவிழா நடைபெறும் நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஒருநாள் மட்டும் நடைபெற உள்ளது. விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் விழாவில் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. தேர்த்திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தலைமையில் நிர்வாகத்தினர், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story