நாமக்கல்லில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி


நாமக்கல்லில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி
x
தினத்தந்தி 11 Feb 2022 11:37 PM IST (Updated: 11 Feb 2022 11:37 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நேற்று நடந்தது.

நாமக்கல்:
வாக்குப்பதிவு எந்திரங்கள்
நாமக்கல் ‌நகராட்சியில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு 109 வாக்குச்சாவடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அந்த வாக்குச்சாவடிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளை கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி தேர்தல் பார்வையாளர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. 
அதன்படி நாமக்கல் நகராட்சி தேர்தலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 105 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 21 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்கள் கூடுதலாக இருப்பில் உள்ளன.
சின்னங்கள் பொருத்தும் பணி
இந்தநிலையில் நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்களை பொருத்தும் பணி நேற்று நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையாளருமான சுதா தலைமை தாங்கினார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செங்கோட்டுவேல், ரவீந்திரன், ஜெயகுருநாதன், சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்கள் என 16 பேர் சின்னங்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள், கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் பெயர்கள் அச்சடிக்கப்பட்ட தாள்களை பொருத்தினர். 
மாதிரி வாக்குப்பதிவு
மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. பின்னர் அந்த வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் அனைத்தும் பாதுகாப்பு பெட்டியில் வைத்து சீல் வைக்கப்பட்டன. 
இவை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு தேர்தலுக்கு முந்தைய நாள் அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story