மகன் இறந்ததால் துக்கம் தாங்காமல் பெண் தீக்குளித்து தற்கொலை
திருவண்ணாமலையில் காதல் கணவர் போக்சோவில் சிறையில் அடைக்கப்பட்டதாலும், 4 வயது மகன் திடீரென உயிரிழந்ததாலும் துக்கம் தாங்காமல் ெபண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் காதல் கணவர் போக்சோவில் சிறையில் அடைக்கப்பட்டதாலும், 4 வயது மகன் திடீரென உயிரிழந்ததாலும் துக்கம் தாங்காமல் ெபண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல் திருமணம்
திருவண்ணாமலை பாவாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25), கூலித்தொழிலாளி. இவரின் மனைவி கல்பனா (22). இருவரும் 2016-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 4 வயதில் பூவரசன் என்ற மகனும், 2 வயதில் நித்தியா என்ற மகளும், 8 மாத வேதஸ்ரீ என்ற கைக்குழந்தையும் உள்ளனர்.
கடந்த ஆண்டு மணிகண்டனை திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் (போக்சோ) கைது செய்தனர். தற்போது அவர் சென்னை புழல் சிறையில் உள்ளார்.
இதற்கிடையே, உடல்நலக் குறைவால் 9-ந்தேதி மணிகண்டனின் மகன் பூவரசன் உயிரிழந்தார். நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் பூவரசனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் கல்பனா சோகத்தில் இருந்தார்.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் மகள் நித்தியாவை தனது உறவினர் வீட்டிலும், கைக்குழந்தையை எதிர் வீட்டிலும் விட்டு விட்டு வீட்டில் பம்பு ஸ்டவ்வில் கல்பனா பால் காய வைத்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
மகன் இறந்த துக்கத்திலும், சோகத்திலும் இருந்த கல்பனா திடீரென மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். இருப்பினும் உடல் கருகிய கல்பனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தொிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கல்பனாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story