முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பிரசாரம்;குமரியில் 120 இடங்களில் ஒளிபரப்பப்பட்டது


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பிரசாரம்;குமரியில் 120 இடங்களில் ஒளிபரப்பப்பட்டது
x
தினத்தந்தி 11 Feb 2022 11:48 PM IST (Updated: 11 Feb 2022 11:48 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பிரசாரம் செய்து பேசியதை 120 இடங்களில் அகன்ற திரைகள் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

நாகர்கோவில், 
குமரி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பிரசாரம் செய்து பேசியதை 120 இடங்களில் அகன்ற திரைகள் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
120 இடங்களில்...
குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் பேசினார்.
இதனை மக்களும், கட்சி நிர்வாகிகளும் காண குமரி கிழக்கு மாவட்டத்தில் 70 மற்றும் மேற்கு மாவட்டத்தில் 50 இடங்களில் அகன்ற திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஒன்று குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம். இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையை தொடங்குவதற்கு முன் மாவட்ட செயலாளர்களையும், நிர்வாகிகளையும் பேசுமாறு கூறினார். அப்போது குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான மனோ தங்கராஜ் பேசியதாவது:-
உள்ளாட்சியிலும் நல்லாட்சி தத்துவம்
குமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் பெரும்பாலான இடங்களில் நமது கட்சியை சேர்ந்தவர்களும், கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களும் தேர்தல் களத்தில் நிற்கிறார்கள். கடந்த 8 மாத கால ஆட்சியில் எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளோம். அதை மக்களிடம் வலியுறுத்தி கூறுகின்றோம். கட்சி தலைவரான தங்களது ஆட்சியில் மற்றவர்களை பற்றி பேச வேண்டிய அவசியம் எழவில்லை. நாம் செய்துள்ள திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொன்னாலே நாம் மகத்தான வெற்றியை பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வருங்கால குமரி, வளமான குமரியாக இருக்கும் என்ற உத்தரவாதத்தை உங்களிடம் கூற விரும்புகிறேன்.
குமரி மாவட்டத்தில் 3 முறை வெள்ளச்சேதம் ஏற்பட்டு, பயிர் சேதமான நேரங்களில் இந்த பகுதிக்கு முதல்-அமைச்சராகிய தாங்கள் உடனடியாக வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதும், அதை தொடர்ந்து எடுத்த பல்வேறு நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சுமார் ரூ.600 கோடிக்கு மேல் வளர்ச்சி பணிகள் மேற்கொண்டுள்ளோம். இதை எல்லாம் மக்கள் மத்தியில் எடுத்துச் சொன்னாலே இந்த தேர்தல் நமக்கு சாதகமான தேர்தலாக அமையும். அந்த வகையில் நாங்கள் தேர்தல் பணிகளை மேற்கொள்கிறோம். நிச்சயமாக நீங்கள் எண்ணுகிறபடி உள்ளாட்சியிலும் நல்லாட்சி என்ற தத்துவம் நிறைவேறும் வகையில் குமரி மாவட்டத்தில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் வெற்றிக்கனியை ஈட்டி, உங்களிடம் சமர்ப்பிப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
வெற்றிக்கனி
குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் பேசுகையில் கூறியதாவது:-
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை 100-க்கு 100 சதவீதம் பெற்று தங்களது காலடியில் நிச்சயமாக சமர்ப்பிப்போம். அதற்கு காரணம் கடந்த 8 மாத காலமாக இந்த ஆட்சியில் நீங்கள் உழைத்த உழைப்பு, அகில இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவில் பாராட்டக்கூடிய அளவுக்கு திட்டங்களும், உழைப்பும் இருந்து வருகிறது. திட்டங்களை தீட்டுவதோடு நின்று விடாமல் அந்த திட்டங்கள் நடைமுறைக்கு வந்து விட்டதா? என்பதை பரிசோதனை செய்யக்கூடிய முதல்-அமைச்சராக தாங்கள் தான் இருக்கிறீர்கள் என்ற உணர்வு மக்கள் மத்தியில் எட்டியுள்ளது.
தாங்கள் பொறுப்பேற்ற காலத்தில் பல்வேறு சோதனைகள் ஏற்பட்டது. மழையினால் ஏற்பட்ட சேதங்களுக்கு முதல்-அமைச்சர் தலையிட்டு உதவி செய்து மக்களை காப்பாற்றியது, கொடிய கொரோனா நோய் தாக்கத்தில் இருந்து தமிழகத்தை காப்பாற்றிய பெருமை உங்களை தான் சாரும். கிழக்கு மாவட்டத்தில் உள்ள 28 பேரூராட்சிகளையும், குளச்சல் நகராட்சி, நாகர்கோவில் மாநகராட்சி என அனைத்திலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது என்று சொல்லும் அளவுக்கு வெற்றிக்கனியை தங்களிடம் ஒப்படைப்போம் என்ற உறுதியை உங்களுக்கு அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின் ஆகியோர் பேசினார்கள். முடிவில் மாநகர தி.மு.க. செயலாளர் வக்கீல் மகேஷ் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் அரசு வக்கீல்கள் லீனஸ்ராஜ், மதியழகன், ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி, நிர்வாகிகள் ஸ்டாலின், நசரேத் பசலியான், வக்கீல் மாதவன்முருகன், டேவிட்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story