பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாத ஆற்றுப்பாலம்


பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாத ஆற்றுப்பாலம்
x
தினத்தந்தி 11 Feb 2022 11:57 PM IST (Updated: 11 Feb 2022 11:57 PM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப் பாலம் பல ஆண்டுகளாக பராமரிக் கப்படாததால், பழுதடைந்துள்ளது. மேலும் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

மடத்துக்குளம்
மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப் பாலம் பல ஆண்டுகளாக பராமரிக் கப்படாததால், பழுதடைந்துள்ளது. மேலும் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
அமராவதி ஆற்றுப்பாலம் 
கோவை - நாகபட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலம் திருப்பூர், திண்டுக்கல் ஆகிய இரு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய பாலமாக உள்ளது. பல மாவட்டங்கள் மற்றும் அருகிலுள்ள மாநிலங்களை சேர்ந்தவர்கள் வாகனங்களில் இந்த பாலத்தை கடந்து செல்கின்றனர். ஒரு நிமிடத்திற்கு 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்லும் அளவில் இந்த பாலத்தின் பயன்பாடு உள்ளது. 
1980-ம் ஆண்டு வரை அகலம் குறைவான பாலம் பயன்பாட்டில் இருந்தது. இதனால் அப்போது அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன. இதற்கு தீர்வாக இரண்டுவழி சாலை அகலத்தில் புதிய பாலம் கட்டப்பட்டு 1984-ம் ஆண்டு திறக்கப்பட்டு, தற்போது வரை பயன்பாட்டில் உள்ளது. 
 பராமரிக்க வேண்டும்
இந்த நிலையில் பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு பணி செய்யப்படாததால் பாலத்தின் தடுப்புச்சுவர்களின் பல இடங்களில் மரக்கன்றுகள் வளர்ந்துள்ளன. இதனால் பாலத்தில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. பாலத்தின் மீதுள்ள நடைபாதை மற்றும் ரோடு ஓரத்தில் செடி, கொடிகள் முளைத்துள்ளன.    
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
அமராவதி ஆற்றுப்பாலத்தின் பல இடத்தில் சுவர்களில் உள்ள விரிசல் பெரிதாகி வருகிறது. பாலத்தின் மீது உள்ள ரோடும் பல இடத்தில் பழுதடைந்துள்ளது. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்குத் தீர்வாக பாலத்தை புதுப்பிக்க வேண்டும்".
 இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story