தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி

கோவில் சாலையை சீரமைக்க ேவண்டும்

  கண்ணமங்கலம் அருகே உள்ள சிங்கிரி கோவில் பகுதியில் நாகநதி வடகரையில் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து செல்கின்றனர். கோவில் அடிவாரத்தில் உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அந்தச் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -குணசீலன், சிங்கிரிகோவில்.

வாகனங்கள் சென்று வர அனுமதிக்க வேண்டும்

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து நியூட்டன் பகுதிக்கு செல்லும் வழியில் ரெயில்வே கேட் உள்ளது. அங்கு மேம்பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. அந்த வழியாக பஸ், லாரி போன்ற வாகனங்கள் செல்லாதவாறு தடுப்பு வைத்துள்ளனர். இதனால் ஆலங்காயம் பகுதிக்கு சென்று வரும் வாகனங்கள் தேவையின்றி பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர நேரிடுகிறது. தடுப்பை அகற்றி விட்டு வாகனங்கள் சென்றுவர அனுமதிக்க வேண்டும்.
  -எம்.ராதாகிருஷ்ணன், வாணியம்பாடி

நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?

  திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள், பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு போதிய இடவசதி கிடையாது. ஆனால் வேலூர் பஸ்கள் நிறுத்தும் பகுதியில் பயணியர் நிழற்குடையில் வரிசையாக மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அங்கு பயணிகள் நிற்க போதிய இடம் இல்லாமல் அவதி அடைகின்றனர். எனவே இது குறித்து திருவண்ணாமலை நகராட்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -ராஜன், திருவண்ணாமலை.

பகலில் எரியும் மின் விளக்குகள்

  சேத்துப்பட்டு ஒன்றியம் மட்டப்பிரையூர் கூட்ரோட்டில் இருந்து கிராமத்துக்கு செல்லும் மெயின்ரோட்டில் 10-க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் இரவிலும், பகலிலும் எரிந்து கொண்டே இருக்கின்றன. தினமும் மாலை சுமார் 6.30 மணிக்கு தெருவிளக்குகளை எரியவிட்டு அதிகாலை நேரத்தில் நிறுத்தி விட வேண்டும். தேவையில்லாமல் பகலில் எரிவதால் மின்கட்டணம் அதிகமாகும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?
  -அண்ணாதுரை, மட்டப்பிரையூர்.

சிறுமின் விசை தொட்டி பழுது

  போளூர் 3-வது வார்டு ஜலீல் தெருவில் சிறுமின்விசை தொட்டி உள்ளது. அது, பழுதாகி ஒரு மாதமாக தண்ணீர் வரவில்லை. அங்குள்ள மக்கள் தண்ணீர் இன்றி சிரமப்படுகிறார்கள். இதுபற்றி பேரூராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பழுதான சிறுமின்விசை தொட்டியின் மின்ேமாட்டாரை சரி செய்து குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டுகிறேன்.
  -ரமேஷ், போளூர்.

 சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால் இடையூறு

  போளூர் கோவிந்தசாமி தெருவில் சாலையின் இரு பக்கமும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். அந்த வழியாக கார், வேன், ஆஸ்புலன்ஸ் ஆகியவை செல்ல இடையூறாக உள்ளது. பேரூராட்சி நிர்வாகமும், போலீசாரும் நடவடிக்கை எடுத்து சாலையோரம் வாகனங்களை நிறுத்தாமல் தடை விதிக்க வேண்டும்.
  -க.முத்து, போளூர்.

கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

  சோளிங்கர் தாலுகா மங்கலம் கிராமத்தில் ஏரி பாசனக் கால்வாய் பல நாட்களாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கால்வாய் ஆவணங்களில் 2.4 மீட்டர் அகலம் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அக்கம் பக்கத்தில் வயல் வைத்திருப்பவர்கள் கால்வாய் வரப்பை வெட்டி வயலாக ஆக்கி கொண்டுள்ளனர். கோடையில் கால்வாயில் தண்ணீர் இல்லாதபோது போக்குவரத்துக்கும், மழைக்காலத்தில் நிலத்தில் அதிகப்படியான தண்ணீர் இருந்தால் வடிய வைப்பதற்கும் கால்வாயை பயன்படுத்தி வந்தோம். தற்போது கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து குறுக்கி விட்டார். இதனால் அந்த வழியாக சென்று வர வழியில்லை. பல விவசாயிகள் உழவுக்கு தேவையான இடுப்பொருட்களை எடுத்துச் செல்ல முடியால் சிரமப்படுகிறார்கள். மாவட்ட வருவாய்த்துறை சார்பில் சர்வே செய்து ஆவணங்களில் இருப்பதுபோல் கால்வாயை அமைத்துத் தர வேண்டும்.
  -ப.ஏழுமலை, மங்கலம்.

Next Story