புறம்போக்கில் வசிக்கும் குடிசைவாழ் மக்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கி இடம் தேர்வு செய்ய நடவடிக்கை


புறம்போக்கில் வசிக்கும் குடிசைவாழ் மக்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கி இடம் தேர்வு செய்ய நடவடிக்கை
x
தினத்தந்தி 12 Feb 2022 12:18 AM IST (Updated: 12 Feb 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

புறம்போக்கில் வசிக்கும் குடிசைவாழ் மக்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கி இடம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

மன்னார்குடி:
புறம்போக்கில் வசிக்கும் குடிசைவாழ் மக்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கி இடம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி கூறினார். 
தி.மு.க.-கூட்டணி கட்சிகள் அறிமுக கூட்டம்
மன்னார்குடியில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் பூண்டி கலைவாணன், டி.ஆர்.பி.ராஜா, மாரிமுத்து, திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக மன்னார்குடி நகர செயலாளர் வீரா.கணேசன் வரவேற்றார். 
கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:- 
மயிலாடுதுறை, கடலூர், தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாள் ஒன்றுக்கு 500 மெட்ரிக் டன் நெல் அரைக்கும் நவீன அரிசி ஆலைகள் தொடங்குவதற்கான அறிவிப்பை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிட உள்ளார். 
திருவாரூர் மாவட்டம் குடிசைகள் அதிகம் நிறைந்துள்ள பகுதி இங்கு  84 ஆயிரம் பேர் குடிசைகளில் வாழ்வதாக கணக்கெடுப்புகள் தெரிவித்துள்ள நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் புறம்போக்கு மற்றும் நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் வசிக்கும் குடிசை வாழ் மக்களுக்காக அரசு சிறப்பு நிதி ஒதுக்கி இடம் தேர்வு செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார். 
இதுவரை காணாத வளர்ச்சியை...
முன்னதாக மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா பேசுகையில், மன்னார்குடி பகுதியின் வளர்ச்சிக்கு புதுப்புது திட்டங்களை அரசு அறிவிக்க இருக்கிறது. இனிவரும் காலங்களில் மன்னார்குடி இதுவரை காணாத வளர்ச்சியை காணப்போகிறது என்றார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ பி.ராஜமாணிக்கம், தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் சு.ஞானசேகரன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாலசந்திரன் மற்றும் நகரசபை தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் தன்ராஜ் நன்றி கூறினார்.

Next Story