யமுனாம்பாள் கோவில் திருவிழா
தைமாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி யமுனாம்பாள் கோவில் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நீடாமங்கலம்:
தைமாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி யமுனாம்பாள் கோவில் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
யமுனாம்பாள் கோவில் திருவிழா
தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் பிரதாப சிம்மரின் மனைவி யமுனாம்பாள். இவர் நீடாமங்கலம் அரண்மனையில் தங்கி வசித்து வந்தார். இந்த பகுதி மக்களை தெய்வம் போல் காத்து வந்த அவர், நிறைமாத கர்ப்பிணியாக அங்கு ஐக்கியமாகி விட்டார். இதனால் யமுனாம்பாள் தோட்டத்தில் அவருக்கு கோவில் எழுப்பி நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி நாட்களில் வழிபாடு நடத்தப்படுகிறது. வருடந்தோறும் தை மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று யமுனாம்பாள் கோவில் திருவிழா விமரிசையாக நடத்தப்படுகிறது. இத்திருநாளில் சாதி, மதங்களை கடந்து வேறுபாடின்றி அனைவரும் யமுனாம்பாளை தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் தைமாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி பக்தர்கள், ராஜகணபதி சன்னதியில் இருந்து பால்குடம் எடுத்தனர். இதனை தொடர்ந்து பாலாபிஷேகம் சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
மாவிளக்கு இட்டு வழிபாடு
யமுனாம்பாளுக்கு தங்ககவச அலங்காரமும், ராஜகணபதிக்கு சந்தனகாப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. பெண்கள் மாவிளக்கு இட்டு வழிபாடு செய்தனர்.. திருமணமாகாத பெண்கள் திருமணமாக வேண்டியும், கர்ப்பிணி பெண்கள் சுகபிரசவம் அடைய வேண்டியும் வழிபாடு செய்தனர். இதில் திரளான பக்தர்கள் மழையை பொருட்படுத்தாமல் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை சத்திர நிர்வாகத்தினர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நீடாமங்கலம் போலீசார் செய்திருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. நீடாமங்கலமே விழாக்கோலம் பூண்டு காட்சியளித்தது.
Related Tags :
Next Story