“மு.க.ஸ்டாலின் சவாலை ஏற்கிறோம்”-மதுரை பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


“மு.க.ஸ்டாலின் சவாலை ஏற்கிறோம்”-மதுரை பிரசார கூட்டத்தில்  எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Feb 2022 1:05 AM IST (Updated: 12 Feb 2022 1:05 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சவாலை ஏற்கிறோம் என்றும், நீட் தேர்வு குறித்து பொதுமக்கள் முன்னிலையில் தி.மு.க.வுடன் விவாதிக்க தயார் என மதுரை பிரசார கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மதுரை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சவாலை ஏற்கிறோம் என்றும், நீட் தேர்வு குறித்து பொதுமக்கள் முன்னிலையில் தி.மு.க.வுடன் விவாதிக்க தயார் என மதுரை பிரசார கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
பொதுக்கூட்டம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாநகராட்சி 100 வார்டுகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் கோ.புதூரில் நேற்று நடந்தது. 
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., மதுரை மண்டல அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பபிரிவு செயலாளர் ராஜ்சத்யன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-
சவாலை ஏற்கிறோம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற அனைவரும் உழைத்திட வேண்டும். எத்தனை துறை இருந்தாலும், உள்ளாட்சி துறை என்பது மக்களுக்கு சேவை செய்யும் ஒரு துறையாக உள்ளது. தி.மு.க. தனது 9 மாத கால ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் செய்திருக்கிறது. கொள்ளையடிப்பதை தவிர மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தேர்தல் பிரசாரம் செய்த போது, அதில் எனக்கும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சவால் விடுக்கிறார். அந்த சவாலை நாங்கள் ஏற்கிறோம்.
நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது யார், எந்த ஆட்சியில் அந்த நச்சு விதை யாரால் ஊன்றப்பட்டது? என்பது குறித்து பொதுவான இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் நாங்கள் விவாதிக்க தயார். அதற்கு மக்கள் நீதிபதிகளாக இருந்து தீர்ப்பு வழங்கட்டும்.
பச்சை பொய் 
கடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வுக்கு முதல் கையெழுத்திட்டு ரத்து செய்து விடுவோம் என்று மு.க.ஸ்டாலின் சொன்னார். ஆனால் இதுவரை நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. தேர்தலின் போது 525 தேர்தல் வாக்குறுதிகள் தந்தார். பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 உதவித்தொகை, சிலிண்டருக்கு ரூ.150 மானியம், பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு, நகைக்கடன் தள்ளுபடி என கூறினார். ஆனால் அதில் தற்போது 400 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார். இது எவ்வளவு பெரிய பச்சை பொய். மக்களை ஏமாளி என்று மு.க.ஸ்டாலின் நினைக்கக்கூடாது. இது விஞ்ஞான உலகம். வார்த்தையை அளந்துதான் பேச வேண்டும்.
பொய் பேசுவதில் மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கினால் பொருத்தமானதாக இருக்கும். உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எனக்கு தெரியும் என்றார். அந்த ரகசியத்தை வைத்து நீட் தேர்வை ரத்து செய்து இருக்கலாம் என்று தற்போது மக்கள் கேட்கிறார்கள். அதற்கு முதலில் நீங்கள் பதில் சொல்லுங்கள்.
புளியில் பல்லி...
மு.க.ஸ்டாலின் தனக்கு தானே, நான் இந்தியாவிற்கு வழிகாட்டி, சூப்பர் முதல்-அமைச்சர், முதல்-அமைச்சருக்கு எல்லாம் முதல்-அமைச்சர் என்று கூறி சந்தோஷம் அடைகிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை மதுரையில் நூலகம் அமைக்கும் திட்டத்தை தவிர ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. 
அந்த திட்டம் என்பது அவரது தந்தை கருணாநிதி பெயரில் உள்ள திட்டமாகும். இது மக்களுக்கான திட்டம் அல்ல. விளம்பர நோக்கில் கொண்டு வரப்பட்ட திட்டம். கருணாநிதிக்குபின் ஸ்டாலின். இப்போது உதயநிதி.  
தி.மு.க. அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமற்றதாக இருந்தன. கோதுமை மாவில் வண்டு விளையாடியது. புளியில் பல்லி செத்து இருந்தது. வெல்லம் உருகி ஓடியது.
ஆனால், இந்த அரசு திறமையான அரசு என்று அவர்களாகவே கூறுகிறார்கள். அவர்கள் ரேஷன் கடை முன்பு நின்று பார்க்கட்டும். மக்கள் அவர்களை பற்றி எப்படி கூறுகிறார்கள் என்று கேட்கட்டும். இந்த ஆட்சியில் எந்த அமைச்சரும் தலைமைச் செயலக அறையில் இருப்பது இல்லை. இலாகாக்களில் அபகரித்து எதில் முதலீடு செய்யலாம் என்ற நோக்கத்துடன் இருக்கின்றனர்.
அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்
உதயநிதி ஸ்டாலின் கரூரில் பிரசாரம் செய்தபோது மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தருவதாக சொன்னீர்கள், இதுவரை வரவில்லை, எப்போது கொடுப்பீர்கள?் என்று மக்கள் கேட்டனர். அதற்கு அவர் 9 மாதங்கள்தான் ஆகிறது. இன்னும் இந்த ஆட்சிக்கு 4 ஆண்டுகள் 3 மாதங்கள் இருக்கிறது என்று கூறுகிறார். அதாவது வாக்களித்த மக்களை ஏமாற்றுவது இதில் இருந்தே புரிகிறது. 
அதே போல் தஞ்சாவூரில் உதயநிதியிடம் உங்களை நம்பி நகையை அடமானம் வைத்துள்ளோம் என்று மக்கள் கேட்டதற்கு மனு கொடுங்கள் என்று கூறுகிறார். 
ஏற்கனவே இவர்கள் ஊர் ஊராக சென்று மக்களிடம் வாங்கிய மனுக்கள் பெட்டியில் போட்டு பூட்டப்பட்டு பத்திரமாக உள்ளது.
எனவே மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்திடுவதற்கு அச்சாரமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story