ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் திருச்சி வாலிபர் பலி


ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் திருச்சி வாலிபர் பலி
x
தினத்தந்தி 12 Feb 2022 1:18 AM IST (Updated: 12 Feb 2022 1:18 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.

அன்னவாசல்
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள திருநல்லூரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் நேற்று காலை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. காளைகளை அடக்க 250-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் வந்திருந்தனர். இதனை மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 
காளை முட்டியதில் வாலிபர் பலி
அதனைத்தொடர்ந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னர், வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக சீறிப்பாய்ந்தன. அவற்றில் பல காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினார்கள். சில காளைகள், மாடுபிடி வீரர்களை பக்கத்தில் நெருங்கக்கூட விடவில்லை. சில காளைகள் தன்னை பிடிக்கவந்த மாடுபிடி வீரர்களை தூக்கி வீசின.
அப்போது ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் அருகே உள்ள கீழப்பட்டியை சேர்ந்த கபடி வீரரும், விராலிமலையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த பாண்டிமுருகன் (வயது 19) என்பவர் ஒரு காளை முட்டியதில் உயிரிழந்தார். 
60 பேர் காயம்
மேலும், ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் மாஸ் (29), தினேஷ் (26), திருமூர்த்தி (25), பார்வையாளர்கள் ராஜேந்திரன் (39), சக்திவேல் (44), சோலமுத்து (30), காளையின் உரிமையாளர்கள் ரஞ்சித்குமார் (48), பாலசுப்பிரமணியன் (22), முத்துக்குமார் (30), ஜோஸ் (24) உள்பட 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தில் தயார்நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
 அவர்களில் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக இலுப்பூர், விராலிமலை, திருச்சி, புதுக்கோட்டையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  ஜல்லிக்கட்டை திருநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் சரக்கு ஆட்டோ, டிராக்டர், லாரி, மரங்கள் உள்ளிட்ட வாகனங்களில் வருகை தந்து கண்டுகளித்தனர்.

Next Story