சம்பா அறுவடை பணி பாதிப்பு
தஞ்சை மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் சம்பா அறுவடை பணியும், கொள்முதல் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் சம்பா அறுவடை பணியும், கொள்முதல் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.
பரவலாக மழை
மன்னர் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து மதியம் வரை மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஓரளவிற்கு பாதிக்கப்பட்டது.
அறுவடை பணி
பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள் குடை பிடித்தபடி சென்றனர். அதேபோல் அலுவலகத்திற்கு சென்றவர்களும் குடை பிடித்த படியே சென்றனர். இந்த மழையின் காரணமாக பூமி குளிர்ந்து குளிர்ந்த காற்று வீசியது.
தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி நெற் பயிர்கள் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. பல இடங்களில் நெல் அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு
தற்போது பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. சில இடங்களில் சாய்ந்து உள்ளன. இதனால் அறுவடை பணி பாதிக்கப்பட்டது.
மேலும் அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் நனையாமல் இருப்பதற்காக தார்பாய் போட்டு விவசாயிகள் மூடி வைத்திருந்தனர்.
கொள்முதல் பணியும் பாதிப்பு
தஞ்சையை அடுத்த காட்டூர் பகுதியில் உள்ள கொள்முதல் நிலையத்தில் தார்பாய் போட்டு நெல் நனையாமல் விவசாயிகள் பாதுகாத்தனர். இதே நிலைதான் பல இடங்களில் நீடித்தது. மழை பெய்ததால் கொள்முதல் பணியும் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, வடசேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மழை பெய்ததால் கடுமையான பாதிப்பு ஏற்படும். செலவு செய்த பணத்தை திரும்ப எடுக்கும் நேரத்தில் இப்படி மழை பெய்கிறது. இதனால் அறுவடை செய்த நெல்லை கூட விற்க முடியவில்லை. ஈரப்பதம் 17 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் எனக் கூறுகிறார்கள். தற்போது மழை பெய்வதால் ஈரப்பதம் அதிகமாக தான் இருக்கும் என்றனர்.
மறு நடவு பயிர்கள்
தஞ்சையை அடுத்த ரெட்டிபாளையம், ஆலக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மறு நடவு செய்யப்பட்டது. இந்த நெற்பயிர்களுக்கு தண்ணீர் தேவையாக இருந்தது. தண்ணீர் இல்லையென்றால் கருகி விடக் கூடிய சூழலில் தற்போது மழை பெய்வதால் அந்தப் பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
நாஞ்சிக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி
்இதேபோல் நாஞ்சிக்கோட்டை பகுதிகளில் பெய்த மழையால் சம்பா அறுவடை பணி பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருக்காட்டுப்பள்ளி மற்றும் பூதலூர் சுற்றுப்பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழை அறுவடைக்கு தயாராக உள்ள சம்பா பயிர்களை பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், பருவம் தப்பி பெய்த மழையால் காலதாமதமாக நடவு செய்த தாளடி நெல் பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
தஞ்சை அருகே வல்லம், சித்திரக்குடி, பழையகல்விராயன்பேட்டை, ஆலக்குடி, கள்ளப்பெரம்பூர் பகுதியில் பெய்த மழையால் சம்பா அறுவடைப்பணிகள் மற்றும் கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டன.
Related Tags :
Next Story