பா.ஜ.க.வின் வெற்றி தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும்


பா.ஜ.க.வின் வெற்றி தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும்
x
தினத்தந்தி 12 Feb 2022 1:53 AM IST (Updated: 12 Feb 2022 1:53 AM IST)
t-max-icont-min-icon

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றி தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தஞ்சாவூர்:
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றி தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
பேட்டி
பா.ஜ.க மாநில முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது அவர் கூறியதாவது:-
மாபெரும் வெற்றியை பெறுவோம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற தமிழகம் முழுவதும் பா.ஜ.க. வேட்பாளர்கள் மிக துடிப்புடன் களப்பணியாற்றி வருகிறார்கள். இந்த முறை மக்கள் பா.ஜ.க.விற்கு முழு ஆதரவு அளித்து வருகிறார்கள். எனவே இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் வெற்றியை பெறுவோம்.
வாக்காளர்களை நான் கேட்டுக்கொள்வது எல்லாம் உங்கள் குடும்பம் நன்றாக இருக்கவும், உங்கள் குழந்தைகள் எதிர்காலம் நன்றாக இருக்கவும் பா.ஜ.க. வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.
சரித்திரத்தை மாற்றும்
வருகிற 22-ந் தேதி தேர்தல் முடிவு வெளிவரும்போது பா.ஜ.க.வின் ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றியும் தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், தான் ஒரு சட்டசபை உறுப்பினர் என்பதை உணர வேண்டும். 
ஒரு எம்.எல்.ஏ. பொது இடத்திற்கு வரும்போது பொதுமக்கள் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். தஞ்சையில், உதயநிதி ஸ்டாலின் பேசும்போது நகைக்கடனை தள்ளுபடி செய்யுமாறு கேட்ட பெண்ணை மிக மோசமாக, கேவலமாக விமர்சனம் செய்துள்ளார். இதற்காக உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் பிரசாரம்
பின்னர் தஞ்சை மானம்புச்சாவடி, வாணக்கார தெரு உள்ளிட்ட பல இடங்களில் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் பா.ஜ.க. மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் வகையில் இந்த தேர்தலை பா.ஜ.க. சந்தித்து வருகிறது. தஞ்சை மாநகரில் பிரதமரின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிக்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த அளவுக்கு பணிகள் சிறப்பாக நடைபெறவில்லை. இதை சரி செய்யும் வகையில் மாமன்றத்தை அலங்கரிக்க வேண்டுமானால் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க. துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பண்ணவயல் இளங்கோ, பொதுச்செயலாளர் ஜெய்சதீஷ் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story