முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பதவியை ராஜினாமா செய்ய தயாரா?


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பதவியை ராஜினாமா செய்ய தயாரா?
x
தினத்தந்தி 12 Feb 2022 2:01 AM IST (Updated: 12 Feb 2022 2:01 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் வரிப்பணத்தில் தரமற்ற பொங்கல் பொருட்கள் வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது பதவியை ராஜினாமா செய்ய தயாரா? என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.

தஞ்சாவூர்:
மக்கள் வரிப்பணத்தில் தரமற்ற பொங்கல் பொருட்கள் வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது பதவியை ராஜினாமா செய்ய தயாரா? என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.
அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பிரசார கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம்எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.மாவட்ட அவைத்தலைவர் திருஞானசம்பந்தம், முன்னாள் மாவட்ட செயலாளர் துரை.திருஞானம், மாவட்ட இணைச்செயலாளர் சாவித்திரி கோபால்,  துணை செயலாளர் பொன்.முத்துவேல், பொருளாளர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர் அறிவுடைநம்பி வரவேற்றார்.
ஓ.பன்னீர்செல்வம்
கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார். 
அப்போது அவர் பேசியதாவது:-
30 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி
தமிழகத்தில் 10 ஆண்டு காலம் முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். சிறப்பான ஆட்சியை வழிநடத்தினார். அவரது மறைவுக்கு பின்னர் 16 ஆண்டு காலம் தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை மக்களுக்கு நேரடியாக வழங்கினார். அவரது மறைவுக்கு பிறகு தொடர்ந்து 4 ஆண்டு காலம் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை நடத்தினார்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 30 ஆண்டுகள் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்த வரலாற்று சாதனை அ.தி.மு.க.வுக்கு தான் உண்டு. இந்த பெருமையை பெற்றுத்தந்தது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தான்.
பொய்யான வாக்குறுதிகள்
எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத எக்கு கோட்டையாக அ.தி.மு.க.வை ஜெயலலிதா உருவாக்கி தந்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அளித்த வாக்குறுதிகள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து 10 ஆண்டு காலம் யாராலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது.
2021-ல் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையும் அ.தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் சிறிய சறுக்கல், இடைவெளியால் குறைவான வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தோம். பொய்யான வாக்குறுதிகளை தி.மு.க. அளித்தது. அதை நம்பிய மக்களும் தி.மு.க.வுக்கு வாக்களித்தனர்.
கேள்வி கேட்கும் மக்கள்
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியாக மாதம்தோறும் ரூ.1,000 கொடுப்பதாக சொன்னார்கள். மாணவர்கள் கல்விக்கடன் ரத்து செய்வோம் என்றனர். விவசாய கடன் தள்ளுபடி என்றார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆகியும் அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் மக்களை நேரில் சந்திக்கவே தி.மு.க.வுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. 
அவர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம், நீட் தேர்வை ஏன் ரத்து செய்யவில்லை? எல்லோருக்கும் நகைக்கடன் ஏன் ரத்து செய்யவில்லை? என கேள்விகளை கேட்கிறார்கள். இவர்களோ இன்னும் 4 ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றுவோம் என்று மழுப்புகிறார்கள். இன்னும் 2 ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தல் நிச்சயம் வரும். அப்போது மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை மக்கள் அப்புறப்படுத்துவார்கள்.
பதவியை ராஜினாமா செய்ய தயாரா?
பொங்கல் பரிசு தொகுப்பாக தமிழக மக்களுக்கு ரூ.2,500 கொடுத்த ஒரே கட்சி அ.தி.மு.க. தான். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், இதுபோதாது ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றார். ஆனால் தி.மு.க. ஆட்சியில் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. யாரும் பயன்படுத்த முடியாத தரமற்ற பொருட்களை பொங்கல் பரிசாக தி.மு.க. அரசு வழங்கியது. நிர்வாக திறமை இல்லாத ஆட்சி நடக்கிறது. 
மக்கள் வரிப்பணத்தில் தரமற்ற பொருட்களை வழங்கிய நீங்கள் (மு.க.ஸ்டாலின்) உங்கள் பதவியை ராஜினாமா செய்ய தயாரா?. தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கான சாதகமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது.
அச்சாரம்
எனவே அ.தி.மு.க. அரசின் சாதனைகளையும், தி.மு.க.வின் பொய்யான பிரசாரத்தையும் பொதுமக்களிடம் எடுத்துக்கூறி நமது வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டும். கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு நமது வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டியது ஒவ்வொருவருடைய தலையாய கடமையாகும். அடுத்து வரக்கூடிய தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அச்சாரமாக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.
தஞ்சை மாநகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை நகராட்சி மற்றும் பேரூராட்சிகளையும் கைப்பற்ற உழைக்க வேண்டும். 
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், ராஜேந்திரன், சி.வி.சேகர், கோவிந்தராசு, முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி, திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினுபாலன், பகுதி செயலாளர்கள் புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மலைஅய்யன், விவசாய பிரிவு செயலாளர் சாமிஅய்யா, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் ஜெயபிரகாஷ் நாராயணன், மகளிரணி செயலாளர் அமுதா ரவிச்சந்திரன், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் நாகராஜன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் வீரராஜ், ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், சாமிவேல், கலியமூர்த்தி மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நகர மற்றும் பேரூர் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பேராவூரணி தெற்கு ஒன்றிய செயலாளர் கோவி.இளங்கோ நன்றி கூறினார்.

Next Story