சிவகிரி அருகே பரபரப்பு: அ.தி.மு.க. முன்னாள் பெண் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு


சிவகிரி அருகே பரபரப்பு: அ.தி.மு.க. முன்னாள் பெண் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
x
தினத்தந்தி 12 Feb 2022 2:05 AM IST (Updated: 12 Feb 2022 2:05 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே அ.தி.மு.க. முன்னாள் பெண் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகிரி
சிவகிரி அருகே அ.தி.மு.க. முன்னாள் பெண் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர்
சிவகிரி அருகே உள்ள அஞ்சூர் ஊராட்சிக்கு உள்பட்ட முத்துக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர் கொடுமுடி ஒன்றிய முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் ஆவார். 
இவருக்கு சொந்தமான தோட்டம் மற்றும் பண்ணை வீடு ஆகியவை அதே பகுதியில் உள்ளது. இவருடைய வீட்டில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் பண்ணை வீடு உள்ளது. தோட்டத்தை சுற்றிலும் ஒரு பகுதியில் கம்பி வேலி மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு அதன் நுழைவு வாயில் பகுதியில் இரும்பு கதவு போடப்பட்டு உள்ளது. 
தூங்கி கொண்டிருந்தார்
சுந்தர்ராஜன் தினமும் தன்னுடைய வீட்டில் இருந்து பகலில் பண்ணை வீட்டுக்கு சென்று அங்கு தோட்ட வேலைகளை கவனிப்பது வழக்கம். பின்னர் இரவு நேரத்தில் மீண்டும் வீட்டுக்கு வந்து விடுவார். 
இந்த பண்ணை வீட்டில் ஆறுமுகம் என்பவர் தங்கி இருந்து தோட்ட வேலைகளை கவனித்து வருகிறார். இரவில் பண்ணை வீட்டின் முன்பகுதியில் ஆறுமுகம் படுத்துக்கொள்வார். நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு ஆறுமுகம், அந்த பண்ணை வீட்டின் முன்புறத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். 
தீப்பற்றி எரிந்தது
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு ஆறுமுகம் திடுக்கிட்டு எழுந்தார். அப்போது பண்ணை வீட்டில் உள்ள கதிர் அடிக்கும் களம் மற்றும் தோட்டத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்ட இரும்பு கதவு பகுதி ஆகியவை தீப்பற்றி எரிந்ததை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார்.  இதனால் பயந்து போன அவர் உடனே இதுபற்றி சுந்தர்ராஜனுக்கு தகவல் கொடுத்தார். மேலும் இதுகுறித்து சிவகிரி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். 
பெட்ரோல் குண்டு வீச்சு
விசாரணையில், ‘தோட்டத்துக்கு வந்த மர்ம நபர்கள் அங்கிருந்த இரும்பு கதவு மற்றும் தோட்டத்தின் உள்ளே உள்ள கதிர் அடிக்கும் களம் ஆகியவற்றில் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது,’ தெரியவந்தது. மேலும் தூங்கி கொண்டிருந்த ஆறுமுகம் சுதாரித்து எழுந்து வருவதற்குள் மர்ம நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதையும் போலீசார் தங்களுடைய விசாரணையில் கண்டுபிடித்தனர்.  இதைத்தொடர்ந்து தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் துப்பறியும் மோப்ப நாய் பவானி சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்தபடி அங்கிருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. 
பரபரப்பு
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜீவானந்தம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டதுடன், ஆறுமுகத்திடமும் விசாரணை நடத்தினர். 
மேலும் இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  அ.தி.மு.க. முன்னாள் பெண் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் சிவகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story