தேர்தல் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் முழுமையாக கண்காணிக்க வேண்டும்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நியாயமான முறையில் நடக்க தேர்தல் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் முழுமையாக கண்காணிக்க வேண்டும் என்று கும்பகோணத்தில் ஜி.கே.வாசன் கூறினார்.
கும்பகோணம்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நியாயமான முறையில் நடக்க தேர்தல் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் முழுமையாக கண்காணிக்க வேண்டும் என்று கும்பகோணத்தில் ஜி.கே.வாசன் கூறினார்.
கண்காணிக்க வேண்டும்
த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் கும்பகோணத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நியாயமான முறையில் நடக்க தேர்தல் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் முழுமையாக கண்காணிக்க வேண்டும். ஆளும் கட்சியின் அதிகார பலம், ஆள் பலம், பண பலம் ஆகியவற்றை அனுமதிக்க கூடாது.
காஞ்சீபுரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் தற்கொலை சம்பவத்தில் சந்தேகம் உள்ளது. இதற்கு விடை காண வேண்டும். தேர்தல் களம் எதிர்க்கட்சிக்கு சாதகமாக உள்ளது.
பெட்ரோல் குண்டு வீச்சு
பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பல இடங்களில் எதிர்க்கட்சி வேட்பாளர்களின் வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளது. இது தேவையற்ற செயல்.
நடைபெற உள்ள தேர்தல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல். மக்கள் பிரதிநிதிகளை, மக்களால் தேர்வு செய்யும் தேர்தல் என்பதால் மக்களின் எண்ணங்கள் பிரதிபலிக்கும் வகையில் தேர்தல் நடக்க வேண்டும்.
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு
தமிழக மீனவர்கள் அச்சத்தோடு வாழ்ந்து வருவது வேதனையாக உள்ளது. இலங்கை அரசுடன் இந்திய அரசு கண்டிப்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இலங்கை அரசு பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெற இந்தியா பல கோடி டாலர்களை வழங்கி உதவும் நிலையில், இலங்கை அரசு தமிழக மீனவர்களை தாக்குவதையும், படகுகளை ஏலம் விடுவதையும் ஒருபோதும் த.மா.கா ஏற்காது.
எனவே மத்திய வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் அதிகாரிகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும்
மத்திய அரசின் நடப்பாண்டு பட்ஜெட், வருங்காலத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும். கொரோனா காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும்.
தடுப்பூசி செலுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் காட்டும் முனைப்பு நோயை கட்டுப்படுத்தி மக்களை காக்கும். இதில் எந்த அரசியலும் இருக்கக்கூடாது.
வாக்குறுதி நிறைவேற்றப்படும்
தஞ்சை, கும்பகோணம் மாநகராட்சிகள் மற்றும் ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளும் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி பெற்றுள்ளது. தஞ்சை மாவட்டத்திற்கு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் செய்யாததை அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் செய்துள்ளனர். குறிப்பாக தஞ்சை மாநகராட்சி அந்தஸ்து, ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் அடங்கும். அதேபோல் கும்பகோணம் மாநகராட்சி வளர்ச்சி பெற நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்காளர்கள் ஓட்டு போட்டு வெற்றி பெறச்செய்ய வேண்டும். எங்கள் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் கும்பகோணத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வாக்குறுதிப்படி நிறைவேற்றி தருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story