திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை: பண்ணாரி சோதனை சாவடியில் அணிவகுத்து சென்ற வாகனங்கள்; கடும் போக்குவரத்து நெரிசலால் ஓட்டுனர்கள் அவதி


திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை: பண்ணாரி சோதனை சாவடியில் அணிவகுத்து சென்ற வாகனங்கள்; கடும் போக்குவரத்து நெரிசலால் ஓட்டுனர்கள் அவதி
x
தினத்தந்தி 12 Feb 2022 2:12 AM IST (Updated: 12 Feb 2022 2:12 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் பண்ணாரி சோதனை சாவடியில் அணிவகுத்து சென்ற வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டுனர்கள் அவதிப்பட்டனர்.

சத்தியமங்கலம்
திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் பண்ணாரி சோதனை சாவடியில் அணிவகுத்து சென்ற வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டுனர்கள் அவதிப்பட்டனர். 
திம்பம் மலைப்பாதை
சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியை அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதை உள்ளது. 
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய சாலையாக இந்த மலைப்பாதை உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. 
மேலும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை செல்கிறது. வனப்பகுதியில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் இந்த மலைப்பாதையை கடந்து செல்வது வழக்கம். அப்போது திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்களில் அடிபட்டு வனவிலங்குகள் இறக்கும் நிலை ஏற்பட்டது. 
இரவு நேர போக்குவரத்துக்கு தடை
இந்த நிலையில் சத்தியமங்கலம் வனப்பகுதியில் வனவிலங்குகளின் உயிரிழப்பை தடுக்க பண்ணாரி- திம்பம் வனச்சாலையில் இரவு நேர போக்குவரத்தை தடை செய்து கடந்த 2019-ம் ஆண்டு ஈரோடு மாவட்ட கலெக்டர் வெளியிட்ட உத்தரவை பிப்ரவரி 10-ந் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. 
இந்த தடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசல் 
இதன்காரணமாக சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் செல்வதற்காக வந்த வாகனங்கள் பண்ணாரி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டன. இதேபோல் கர்நாடக மாநிலத்தில் இருந்து சத்தியமங்கலத்துக்கு வந்த வாகனங்கள் காரப்பள்ளம் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டன.
இதனால் பண்ணாரி சோதனை சாவடியில் இருந்து குய்யனூர் பகுதி வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 
நேற்று காலை 6 மணிக்கு பண்ணாரி சோதனை சாவடியில் இருந்து வாகனங்கள் திம்பம் மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டன. ஒன்றன் பின் ஒன்றாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பெரும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் எறும்பு போல் ஊர்ந்து சென்றன. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். 
ஊர்ந்து செல்ல வேண்டிய...
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. அதுவும் இந்த கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் குறுகலானவை ஆகும். இரவு முழுவதும் வாகனங்களை தடுத்து நிறுத்தி விடும்போது கண்டிப்பாக திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டு உள்ளது. 
இதனால் குறிப்பிட்ட நேரத்துக்கு வாகனங்கள் தங்களுடைய இடங்களுக்கு செல்ல முடியாது. இதே நிலை நீடித்தால் வாகன ஓட்டிகள், விவசாயிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். 

Next Story