சிவகிரி அருகே கோவில் திருப்பணி: கன்னிமார் சிலைகள் வைக்கும் இடத்தில் நாகப்பாம்பு வந்தது; பக்தர்கள் பரவசம்


சிவகிரி அருகே கோவில் திருப்பணி: கன்னிமார் சிலைகள் வைக்கும் இடத்தில் நாகப்பாம்பு வந்தது; பக்தர்கள் பரவசம்
x
தினத்தந்தி 12 Feb 2022 2:36 AM IST (Updated: 12 Feb 2022 2:36 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே கோவில் திருப்பணி நடந்து வருகிறது. இங்கு கன்னிமார் சிலைகள் வைக்கும் இடத்தில் நாகப்பாம்பு வந்தது. இதனால் பக்தர்கள் பரவசம் அடைந்தார்கள்.

சிவகிரி
சிவகிரி அருகே கோவில் திருப்பணி நடந்து வருகிறது. இங்கு கன்னிமார் சிலைகள் வைக்கும் இடத்தில் நாகப்பாம்பு வந்தது. இதனால் பக்தர்கள் பரவசம் அடைந்தார்கள். 
நாகப்பாம்பு
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ரங்கசமுத்திரத்தில் கன்னிமார், கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலை புனரமைத்து அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் முடிவு செய்தனர். இதற்காக திருப்பணிகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ஒரு நாகப்பாம்பு ஊர்ந்தது. அதைப்பார்த்த தொழிலாளர்கள் பயந்துபோய் ஓடினார்கள். 
பக்தர்கள் பரவசம்
 ஆனால் பாம்பு தொழிலாளர்கள் பக்கம் செல்லாமல் கோவிலில் 7 கன்னிமார் சிலைகள் பிரதிஷ்டை செய்ய வரையப்பட்டு இருந்த கட்டங்களில் ஏறி நின்றது. இந்த காட்சியை பார்த்ததும் பக்தர்கள் பரவசம் அடைந்து நாகாத்தம்மா என்று பக்தி கோஷம் எழுப்பி கையெடுத்து வணங்கினார்கள். இதுபற்றி தகவல் பரவியதும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டுவிட்டார்கள். சிலர் செல்போனில் படம் பிடித்தார்கள்.  சில நிமிடங்கள் அங்கேயே இருந்த பாம்பு பின்னர் அருகே இருந்த தோட்டத்துக்குள் சென்றுவிட்டது. 
சமூக வலைத்தளங்களில்...
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘பரம்பரை பரம்பரையாக எங்கள் முன்னோர்கள் வழிபட்ட கோவில் இது. அடிக்கடி இங்கு பாம்பு வரும். கன்னிமார் சிலைகளை பிரதிஷ்டை செய்யும்  இடத்தில் நாகப்பாம்பு வந்து சென்றது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது' என்றார்கள்.
திருப்பணிகள் நடந்த இடத்தில் நாகப்பாம்பு வந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Next Story