களரம்பட்டி பெரிய ஏரியில் தெப்பத்தேர் விடும் விழா
களரம்பட்டி பெரிய ஏரியில் தெப்பத்தேர் விடும் விழா நடைபெற்றது.
பெரம்பலூர்:
ஏரி நிரம்பியது
பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டியில் உள்ள பெரிய ஏரி நிரம்பி கடைக்கால் வழியாக உபரி நீர் சென்றால், அருகே உள்ள அம்மாபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள், ஏரிக்கரையில் உள்ள வரகுபாடி அம்மனுக்கு சீர் எடுத்து வந்து, ஏரியில் தெப்ப தேர் விடுவது வழக்கம். ஆனால் கடந்த 16 ஆண்டுகளாக களரம்பட்டி பெரிய ஏரி நிரம்பவில்லை. இதனால் ஏரியில் தெப்பத்தேரும் விடப்படவில்லை.
இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவ மழையால் 16 ஆண்டுகளுக்கு பிறகு களரம்பட்டி பெரிய ஏரி நிரம்பி, கடைக்கால் வழியாக அருகே உள்ள ஏரிகளுக்கு உபரிநீர் சென்றது. இதனை கொண்டாடும் விதமாகவும், ஊர் வழக்கப்படியும் களரம்பட்டி பெரிய ஏரியில் தெப்பத்தேர் விடும் விழா நேற்று மாலை நடந்தது.
தெப்பத்தேர் விடப்பட்டது
முன்னதாக அம்மாபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் வரகுபாடி, தேம்பாடி அம்மன்களுக்கு சீர் எடுத்து ஏரிக்கரை வழியாக தாரை தப்பட்டை முழங்கவும், வாண வேடிக்கையுடனும், ஆட்டம் பாட்டத்துடனும் ஊர்வலமாக, ஏரிக்கரையில் உள்ள வரகுபாடி அம்மன் கோவில் முன்பு வந்து நின்று, அம்மனை வழிபட்டனர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் 2 அகன்ற விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து விளக்குகளுடன் அந்த தெப்பத்தேர் களரம்பட்டி பெரிய ஏரியில் விடப்பட்டது. இதில் அம்மாபாளையம், களரம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஏரியில் தெப்பத்தேர் விடும் விழாவினை கண்டுகளித்தனர். பாதுகாப்பு பணியில் பெரம்பலூர் போலீசார் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story