ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் அடியோடு சாய்ந்தன


ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் அடியோடு சாய்ந்தன
x
தினத்தந்தி 12 Feb 2022 2:39 AM IST (Updated: 12 Feb 2022 2:39 AM IST)
t-max-icont-min-icon

மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் அடியோடு சாய்ந்தன.

தா.பழூர்:

சம்பா பருவ சாகுபடி
டெல்டா பாசன பகுதியான அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்து 400 எக்டேர் பரப்பளவில் சம்பா பருவ சாகுபடி செய்யப்பட்டு பெரும்பாலான வயல்களில் அறுவடைக்கு நெற்பயிர்கள் தயாராக உள்ளன. கடந்த ஆண்டு சம்பா பருவ அறுவடை காலத்தில் பெய்த கடும் மழை காரணமாக விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். மேலும் இந்த ஆண்டு ஆடிப்பட்டத்தில் விதைப்பதற்கு போதிய தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் தாமதமாக நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனால் வழக்கமாக மார்கழி மற்றும் தை மாதங்களில் ஆரம்பத்திலேயே நடந்து முடிந்திருக்க வேண்டிய அறுவடை பணிகள் இந்த ஆண்டு தாமதமாக நடைபெற்று வருகின்றன. உரத்தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் இருந்து நெற்பயிர்களை காப்பாற்றிய விவசாயிகளுக்கு கணிசமாக லாபம் ஈட்டக்கூடிய வகையில் விளைச்சல் அமைந்திருந்தது.
நெற்பயிர்கள் சாய்ந்தன
இந்த நிலையில் திடீரென நேற்று காலை முதல் பெய்து வரும் மழையால் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் நன்கு விளைந்து விளைச்சலுக்கு தயாராக உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்களில் நெற்பயிர்கள் அடியோடு சாய்ந்து வருகின்றன. இடங்கண்ணி, தென்கச்சிபெருமாள்நத்தம், தா.பழூர், வாழைக்குறிச்சி, காரைக்குறிச்சி, கோடாலிகருப்பூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் ஆங்காங்கே வயல்களில் நெற்பயிர்கள் மழைநீரில் நனைந்து எடை கூடுவதால் நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்து விழ தொடங்கியுள்ளன. மழை தொடர்ந்து 3 நாட்களுக்கு பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், சம்பா பருவம் முழுவதும் உழைத்து உருவாக்கிய நெல்மணிகளை அறுவடை செய்ய முடியுமா? என்று விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.
ஒருவேளை நேற்று பெய்த மழையோடு மழை நின்று விட்டாலும் கூட கதிர் அறுக்கும் எந்திரங்கள் இன்னும் 10 நாட்களுக்கு வயலில் இறங்கி அறுவடை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வயல் ஈரமாக இருக்கும்போது பிரத்யேக அறுவடை எந்திரங்கள் மூலம் நெற்கதிர்களை அறுவடை செய்தால் இழப்பு கூடுதலாக இருக்கும் என்று விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். அறுவடை எந்திரம் வயலில் இறங்கும் அளவுக்கு வயல்கள் காய்ந்த பிறகு அறுவடை செய்யலாம் என்று காத்திருந்தால் எலி உள்ளிட்ட பல்வேறு ஜீவராசிகள் நெல்மணிகளை சேதப்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
விவசாயிகள் வேதனை
அதேபோல் அறுவடை நிறைவடைந்த வயல்வெளிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள வைக்கோல் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. ஒரு பருவம் முழுதும் செய்த விவசாயத்தில் நெல்மணிகளை விற்று வரும் வருமானம், ஏற்கனவே செய்த செலவுக்கு ஈடாக இருந்தால் வைக்கோல் விற்பனை அவர்களுக்கு லாபம் ஈட்டித்தரக்கூடிய ஒன்றாக இருந்து வந்தது. திடீர் மழையால் வைக்கோலும் வீணாகி விற்பனை செய்ய முடியாத சூழலில் விவசாயிகள் தவித்து வருகின்றனர். அறுவடை நேரத்தில் பெய்யும் மழையை விவசாயிகள் வேறு வழியின்றி வேதனையோடு பார்த்து வருகின்றனர்.

Next Story